புதுடில்லி:சொத்து விவரங்களை வெளியிடாத ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 208 பேர் மீது, தண்டனை நடவடிக்கை பாய உள்ளது.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அனைவரும், ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், தங்களது மற்றும் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள அசையாச் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பது அரசுப் பணி விதிகளில் உள்ள நடைமுறை. ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, 208 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களின் பெயரில் உள்ள சொத்துக்கள், வருமான வரி கணக்கு விவரங்கள் மற்றும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள சொத்து விவரங்களை வெளியிடவில்லை. அதனால், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை மத்திய அரசு துவக்கியுள்ளது.
கடந்த ஆண்டு வரை உள்ள சொத்து விவரங்களை சமர்ப்பிக்காதது ஏன் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து, விளக்கம் கேட்டு பெறும்படி, அவர்கள் பணியாற்றும் துறைகள் மற்றும் அமைச்சகங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு அவர்கள் சரியான பதில் தரவில்லை எனில், தண்டனை நடவடிக்கை பாய உள்ளது.இதுவரையில் இல்லாத வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளிக்கும் சான்றிதழ் மறுக்கப்படும். லஞ்ச ஒழிப்புத் துறையினர் சான்றிதழ் வழங்கினால் தான், பதவி உயர்வுக்கான பட்டியலில் இவர்கள் இடம் பெற முடியும்.பொதுவாக, குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு உள்ளான அதிகாரிகளுக்குத் தான், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் சான்றிதழ் மறுக்கப்படும். தற்போது அசையாச் சொத்து விவரங்களை வெளியிடவில்லை என்பதற்காக, லஞ்ச ஒழிப்புத் துறை வழங்கும் சான்றிதழ் மறுக்கப்பட உள்ளது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.