சர்வதேச அளவிலான சைபர் மோசடி: ஆந்திராவில் 33 பேர் அதிரடி கைது
                            வாசிக்க நேரம் இல்லையா?
                             செய்தியைக் கேளுங்கள் 
                              
                             
                            
அனகப்பள்ளி:ஆந்திராவில் சர்வதேச அளவில் சைபர் மோசடியில் ஈடுபட்ட, 33 பேர் அடங்கிய கும்பலை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆந்திராவின் அனகப்பள்ளி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 'கால்சென்டர்' பெயரில் சைபர் மோசடி நடப்பதாக வந்த தகவலை அடுத்து, டி.எஸ்.பி., விஷ்ணு ஸ்வரூப் தலைமையிலான போலீசார், கடந்த இரு நாட்களாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.  இணையதளம்
இதில், மாவட்டத்தின் பல இடங்களில் கால்சென்டர் பெயரில், அமெரிக்காவில் வசிப்பவர்களை குறி வைத்து, இணையதளத்தை பயன்படுத்தி ஒரு கும்பல் பணமோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து, அந்த அலுவலகங்களை மூடி சீல் வைத்த போலீசார், மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 33 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உயர் ரக கணினிகள், இணையதள உபகரணங்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.இது குறித்து டி.எஸ்.பி., விஷ்ணு ஸ்வரூப் கூறியதாவது:
மோசடிக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட மஹாராஷ்டிராவைச் சேர்ந்த புனித் கோஸ்வாமி மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த அவிஹந்த் தாகா உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டனர்.  ரூ.600 கோடி
இவர்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் பணிக்கு சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு மோசடி குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் அமெரிக்காவில் வசிக்கும் நபர்களை குறிவைத்து, அவர்களுக்கு பரிசு விழுந்திருப்பதாக ஆசை வார்த்தை கூறி, பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 600 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததும் தெரியவந்துஉள்ளது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை ஆன்லைன் வாயிலாக பணிக்கு சேர்த்து, அவர்களை சைபர் மோசடிக்கு பயன்படுத்திய கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அமேசான் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தியும் மோசடி நடத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இது போல் கால்சென்டர் அமைத்து மோசடி நடத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.