சட்டவிரோதமாக வசித்த 4 வங்கதேச பிரஜைகள்
நரேலா: டில்லியின் நரேலாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நான்கு வங்கதேச நாட்டினர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச பிரஜைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன. நரேலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், குறிப்பாக சாலையோர குடியிருப்புகள், தற்காலிக குடியிருப்புகளில் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனரா என்பது குறித்து ஒரு போலீஸ் படை ஆய்வு செய்து வந்தது.பல வாரங்களாக சேகரிக்கப்பட்ட உளவுத்துறையின் தகவல்கள் அடிப்படையில், 25ம் தேதி அன்று, ஹபிஜுல், 19, மோமினுல், 21, ஷமிம், 22, இனாமுல், 38, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் வங்கதேசத்தின் குடிகிராம் மற்றும் நாகேஸ்வரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். குழந்தை பருவத்திலேயே பெற்றோருடன் டில்லிக்கு குடியேறியதும் பல ஆண்டுகளாக இங்கே சட்டவிரோதமாக வசித்து வருவதும் தெரிய வந்தது.வேலை தேடி பகதுார்கர், சோனிபட், குர்ஜா, மகேந்திரகர், காஜியாபாத், பெஹ்ரூர், டில்லி உள்ளிட்ட நகரங்களுக்கு அடிக்கடி இடம்பெயர்ந்து, போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.அவர்களை நாடு கடத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.