ஜார்க்கண்டில் சுரங்கம் இடிந்து நிலக்கரி தோண்டிய 4 பேர் பலி
ராம்கார்: ஜார்க்கண்டில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் நிலக்கரி எடுத்தபோது, சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து நான்கு பேர் பலியாகினர்.ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தின் குஜூ அருகே உள்ள கர்மா பகுதியில், மத்திய கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தால் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு, நேற்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக நிலக்கரி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் சுரங்கத்தின் இடிபாடுகளில் சிக்கியதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், போலீசார் வருவதற்கு முன் அப்பகுதியினர் இடிபாடுகளில் சிக்கிய மூவர் உடல்களை எடுத்து சென்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் ஒரு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது. விபத்தை கண்டித்து சுரங்க அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.