உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 54 இந்தியர்கள்; போலீசார் விசாரணை

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 54 இந்தியர்கள்; போலீசார் விசாரணை

புதுடில்லி: சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தியர்கள் 54 பேர் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் அமெரிக்கா சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அமெரிக்காவில் முறையான விசா இல்லாமல் வசித்து வரும் வெளிநாட்டினரை நாடு கடத்தும் பணியை அதிபர் டிரம்ப் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியர்கள் உள்பட பல நாடுகளில் இருந்து வந்தவர்களை கொத்து கொத்தாக திருப்பி அனுப்பி வருகின்றனர். அடுத்தடுத்த கட்டங்களாக இதுவரையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த 54 பேரை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது. அதில், கர்னல் பகுதியைச் சேர்ந்த 16 பேர், கைதலைச் சேர்ந்த 15 பேர், அம்பாலா, குருஷேத்ராவில் தலா 4 பேர், ஜிந்தில் 3 பேர், சோனிப்பேட்யில் 2 பேர், பஞ்ச்குலா, பானிப்பட்,ரோதக், பதேஹாபாத் பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 54 பேர் அடங்குவர்.இது தொடர்பாக டிஎஸ்பி சந்தீப் கூறியதாவது; இந்தியர்களை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் சனிக்கிழமை டில்லி வந்தது. அவர்களை டில்லியில் இருந்து கர்னலுக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த 54 பேரும் அமெரிக்காவுக்கு எவ்வாறு சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோத கழுதைப் பாதை வழியாக அமெரிக்காவில் நுழைந்தார்களா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !