உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6,000 கிலோ மெத் ஆம்பெட்டமைன் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சிக்கியது

6,000 கிலோ மெத் ஆம்பெட்டமைன் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சிக்கியது

புதுடில்லி : அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே, கப்பலில் கடத்தி வரப்பட்ட 6,000 கிலோ, 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருளை, நம் கடலோர காவல் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

3,000 பாக்கெட்டுகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே வங்கக்கடல் பகுதியில், கடந்த 24ம் தேதி வந்து கொண்டிருந்த கப்பலின் மீது சந்தேகம் அடைந்த கடலோர காவல் படையினர், கப்பலின் வேகத்தை குறைக்கும்படி உத்தரவிட்டனர்.ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல் கப்பல் வேகம் எடுத்தது. உடனடியாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் விரைந்து வந்து, அந்த கப்பலை பாரன் தீவுப் பகுதியில் வழிமறித்து, அதை போர்ட் பிளேயருக்கு இழுத்து சென்றனர். அந்த கப்பலில் இருந்து 6,000 கிலோ மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம், 3,000 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.ஒவ்வொரு பாக்கெட்டிலும் தலா 2 கிலோ மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் இருந்தன. இவை, சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புடையவை.கப்பலில் இருந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஆறு பேரை, அதிகாரிகள் கைது செய்தனர்.

பறிமுதல்

இந்த போதை பொருள், இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் வினியோகிக்க கடத்தி வரப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தமான் தீவுகளில் இவ்வளவு அதிகமான போதை பொருள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டது இல்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, கடலோர காவல் படையினருடன் சேர்ந்து போலீசார் கூட்டு விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை