மேலும் செய்திகள்
மின்னல் தாக்கி 2 பேர் பலி
15-May-2025
புவனேஸ்வர்: ஒடிஷாவில் இடியுடன் மின்னல் தாக்கியதில், ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். ஒடிஷாவில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கோரபுட், கட்டாக், குர்தா, நயகர், ஜாஜ்புர், கஞ்சம் ஆகிய பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். அப்போது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில், ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர்; மேலும் சிலர் காயம் அடைந்தனர்.பலியானவர்களில் மூவர் கோரபுட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஜாஜ்பூர் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் தலா இருவரும், தேன்கனல் மற்றும் கஜபதி மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகினர். கோரபுட் மாவட்டத்தில் மழை பெய்தபோது, வயலில் வேலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பெலகுந்தா பகுதியில், தோப்பில் மாம்பழம் சேகரித்தபோது இளம்பெண்ணும், கபிசூர்யா நகரில் ஏழாம் வகுப்பு மாணவர் ஓம் பிரகாஷ் பிரதானும் மின்னல் தாக்கி இறந்தனர். ஜாஜ்பூர் மாவட்டத்தில் தர்மசாலா பகுதியில் புருசாகி கிராமத்தைச் சேர்ந்த டேரே ஹெம்புரும், 15, துக்குலு சத்தார், 12, ஆகிய இருவர் மின்னல் தாக்கி இறந்தனர். தேன்கனலில் உள்ள குசுமுண்டியா கிராமத்தில் சுருஷி பிஷ்வால், 40, என்ற பெண் உயிரிழந்தார். கஜபதியின் மோகனா பகுதியில் டிராக்டர் டிரெய்லரில் இருந்து செங்கற்களை இறக்கியபோது, மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.சம்பவம் குறித்து அறிந்து, அப்பகுதியை பார்வையிட்ட அதிகாரிகள், அரசு வழிகாட்டுதலின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
15-May-2025