சிகரெட் துண்டுகளை சேகரிக்க தனிப்பெட்டி
பெங்களூரு : பெங்களூரு சாலைகளில் துாக்கி வீசப்படும் சிகரெட் துண்டுகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, அவற்றை சேகரிக்க, தனிப்பெட்டி வழங்க, பெங்களூரு மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.பெங்களூரு நகரில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகரெட் புகைத்த பின், அவற்றின் எச்சங்களை சாலையில் வீசுகின்றனர். அவற்றிலுள்ள ரசாயனங்களால், நிலத்தடி நீர், மண், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன.இதைத் தடுக்க, மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், நவ., 2022ல் சிகரெட், பீடியை அப்புறப்படுத்த விதிமுறைகளை வகுத்தது. இவற்றை பெங்களூரில் அமல்படுத்த மாநகராட்சியில் ஆலோசனை நடத்தி உள்ளது.தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். பெங்களூரு மாநகராட்சியும், சிகரெட் உற்பத்தி செய்யும் ஐ.டி.சி., நிறுவனமும் இணைந்து, நகரின் முக்கிய இடங்களில், சிகரெட் துண்டுகள் சேமிக்கும் பெட்டியை வைக்க உள்ளன.இதில் சேகரிக்கப்படும் சிகரெட் துண்டுகள், கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க அல்லது மறுசுழற்சி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.சுகாதாரம், குடும்ப நலத்துறைக்கு உட்பட்ட மாநில புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு, சிகரெட் பாக்கெட்களில், சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்தும் முறை குறித்த வழிகாட்டிகளை அச்சிட தயாராகி வருகின்றன.முதல்கட்டமாக, இரண்டு வார்டுகளில், பெட்டிகளை வைக்க வேண்டும். திட்டமிட்டபடி, பெட்டிகளை வைக்கவில்லை என்றால், நடவடிக்கை எடுக்கப்படும், என்று ஐ.டி.சி., நிறுவனத்துக்கு, பெங்களூரு மாநகராட்சி கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.