இந்திய கலாசாரம் படிக்க வந்த அமெரிக்க மாணவியை மானபங்கப்படுத்த முயன்ற காவலாளி, கார் டிரைவர் கைது
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், இந்திய கலாசாரம் பற்றிப் படிக்க வந்த அமெரிக்க மாணவியை, மானபங்கப்படுத்த முயன்ற காவலாளி, கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்கா செல்வலி, பாத்வே பகுதியைச் சேர்ந்த ருஷன் பாக்கர் மகள் ஆஜா பாக்கர்,19. இந்திய கலாசாரம் பற்றித் தெரிந்து கொள்ள, புதுச்சேரி பல்கலைக்கழக தெற்காசிய படிப்பு மையத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் சேர்ந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர் விடுதியில், தங்கிப் படித்து வந்தார். கடந்த, 20 ம்தேதி விடுதியில் இருந்தபோது, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி சையத் ரகுமான், ஆஜா பாக்கரிடம் தனது மொபைல்போனை சார்ஜ் செய்யக் கொடுத்தார். சில மணிநேரத்திற்குப் பின் மொபைல்போனை வாங்க, அவரது அறைக்குச் சென்றார். அப்போது, ஆஜா பாக்கரை கட்டியணைத்து, தவறாக நடக்க முயன்றுள்ளார்.
ஆஜா சத்தம் போட்டதும், அங்கிருந்து சையத் ரகுமான் தப்பி ஓடிவிட்டார். மனவேதனை அடைந்த மாணவி, சொந்த நாட்டுக்குச் செல்ல முடிவு செய்தார். நேற்று முன்தினம் வாடகைக் காரில், பல்கலைக்கழகத்திலிருந்து, இ.சி.ஆர்., வழியாக சென்னை ஏர்போர்ட்டிற்குச் சென்று கொண்டு இருந்தார். காரை, முருங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கார் டிரைவர் சந்தானக்கிருஷ்ணன் ஓட்டினார். அப்போது ஆஜாவிடம், கார் பழுது என்று கூறி, தவறாக நடக்க முயற்சித்தார். சென்னைக்கு, 2 மணி நேரத்தில் செல்ல வேண்டிய ஆஜா, 4 மணி நேரம் தாமதமாகச் சென்றதால், ஆஜாவால் அமெரிக்கா செல்ல முடியவில்லை.
கோபமடைந்த ஆஜா, வேறு ஒரு வாடகைக் காரைப் பிடித்து, புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். பின், நடந்த சம்பவம் குறித்து, காலாப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். எஸ்.பி., சிவதாசன் தலைமையில் காலாப்பட்டு போலீசார், காவலாளி, கார் டிரைவரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 354 பிரிவின் (மானபங்க முயற்சி) கீழ் கைது செய்தனர். இந்திய கலாசாரத்தைப் பற்றி படிக்க வந்த அமெரிக்க மாணவி மானபங்கம் செய்யப்பட்டது, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.