மேலும் செய்திகள்
என் அம்மாதான் நான் பார்த்த முதல் விஞ்ஞானி..
11-Nov-2024
கிராமத்தின் விவசாய பெண், கல்வியில் புரட்சியை ஏற்படுத்தி, ஏழை மாணவர்களின் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றுகிறார்.ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் தலைமை குணம் உண்டு என்பதை, பலரும் நிரூபித்துள்ளனர். இவர்களில் மல்லவ்வா பீமப்பா மேட்டி, 48 என்பவரும் ஒருவர். மன திடம், தலைமை குணம் கொண்டவர். போட்டி தேர்வு
பெலகாவி, ராய்பாகின் மன்டூர் என்ற கிராமத்தில் வசிப்பவர் மல்லவ்வா. நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த இவர், இரண்டு முறை கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தவர். படிப்பறிவு இல்லாத இவர், ஏழை மாணவர்களின் கல்விக்கு பல வசதிகளை செய்துள்ளார். மன்டூர் கிராமத்தில், 6,000 மக்கள் தொகை உள்ளது. இங்கு ஒரே ஒரு தொடக்க பள்ளி மட்டுமே உள்ளது. உயர்கல்வி பெற ராய்பாக் அல்லது கோகாக் போன்ற நகர்ப் பகுதிகளுக்கு, மாணவர்கள் செல்ல வேண்டி உள்ளது.தொலைவில் உள்ள நகரங்களுக்கு செல்வது கஷ்டம் என்பதால், மாணவர்கள் பலரும் உயர் கல்வி பெறுவதில், ஆர்வம் காட்டவில்லை. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும், தேவையான வசதிகள் இல்லை. இதை மல்லவ்வா கவனித்தார்.தனக்கு எழுத, படிக்க தெரியா விட்டாலும், தன் கிராமத்தின் சிறார்கள் படிக்க வேண்டும் என, விரும்பினார். இதற்கான முயற்சிகளிலும் இறங்கினார்.மாணவர்களுக்கு, குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக, தன் கிராமத்தில் நுாலகம் அமைக்க திட்டமிட்டார்.இது குறித்து, மன்டூர் கிராம பஞ்சாயத்திடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. மனம் தளராத மல்லவ்வா, தன் சொந்த முயற்சியில் நுாலகம் அமைக்க முடிவு செய்தார்.இரண்டு முறை கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பணியாற்றிய அனுபவம், அவருக்கு கை கொடுத்தது. முதலில் நுாலகம் அமைக்க இடம் தேடினார். மன்டூரின் பீரசித்தேஸ்வரா கோவிலுக்கு சொந்தமான இடம் இருப்பதை அறிந்து, டிரஸ்டிகளை தொடர்பு கொண்டு பேசினார். நுாலகம் அமைப்பு
அந்த இடத்தின் ஒரு பகுதியில், நுாலகம் அமைக்க அனுமதி கேட்டார். டிரஸ்டிகளும் சம்மதித்து இடம் கொடுத்தனர். மல்லவ்வாவின் முயற்சியால், அந்த இடத்தில் நுாலகம் அமைந்தது.அங்கு மாணவர்களின் கல்வி மற்றும் போட்டி தேர்வுக்கு உதவும் புத்தகங்கள் வைக்கப்பட்டன.அதிகமான மாணவர்கள் வந்ததால், இட பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே இதை விஸ்தரிக்க திட்டமிட்டார். தன் சொந்த செலவில் மற்றொரு பிளாக் கட்டினார். இதற்காக 'கிரஹ லட்சுமி' திட்டத்தில் தனக்கு கிடைத்த பணத்தையும் பயன்படுத்தினார்.இவரது பணியை கவனித்து, கிராமத்தினர், தொழிலதிபர்கள் நிதியுதவி வழங்கினர். ஒரு நன்கொடையாளர், நுாலகத்துக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார். சிலர் புத்தகங்கள் கொடுத்தனர். சமீபத்தில்தான் நுாலகம் திறக்கப்பட்டது. மாணவர்களால் வாங்க முடியாத பல அரிய புத்தகங்களும் கூட, இங்கு உள்ளன.நுாலகம் செயல்படுவதை மேற்பார்வையிட, கமிட்டி ஒன்றை மல்லவ்வா அமைத்துள்ளார். இதன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்துக்கு வழி ஏற்படுத்தி உள்ளார். இளைய மருமகள்
மல்லம்மாவும், அவரது கணவரும் படிக்காதவர்கள். வறுமை காரணமாக இவர்களின் இரண்டு மகன்கள், ஒரு மகளுக்கு உயர் கல்வி அளிக்க முடியவில்லை. ஆனால் கிராமத்து பிள்ளைகளின் கல்விக்கு உதவுவதில், ஆர்வம் காட்டி முன்னுதாரணமாக வாழ்கிறார். அது மட்டுமல்ல, தன் இளைய மருமகளை உயர் கல்வி பெறவும், பெங்களூரில் போட்டி தேர்வுக்கு தயாராக ஊக்கப்படுத்துகிறார்.ராய்பாக் தாசில்தார் சுரேஷ் கூறியதாவது:நுாலக விஷயம் தாலுகா பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் வருகிறது. மன்டூர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுாலகத்தை நேரில் பார்வையிட்டு, அதை தரம் உயர்த்த தேவையான உதவிகளை செய்வோம்.மல்லம்மாவிடம் தலைமை குணம் வேரூன்றி உள்ளது. தொலை நோக்கு பார்வையுடன் சிந்திக்கிறார். ஸ்மார்ட் போன்கள் இருந்தாலும், போட்டி தேர்வுகளுக்கு தயாராக புத்தகங்கள் மிகவும் வசதியாக இருக்கும். ஆழமாக கற்கவும் உதவும். மாணவர்களால் புத்தகங்களை விலைக்கு வாங்க முடியாது. அவர்களுக்கு மல்லவ்வா அமைத்த நுாலகம் வரப்பிரசாதமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.
11-Nov-2024