தடகளத்தில் சாதிக்கும் கிராமத்து மாணவி
பொதுவாக நகர்ப்பகுதிகளில் உள்ளவர்களே, விளையாட்டில் திறமைசாலிகளாக இருப்பர் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களை விட, தாங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை, கிராமப்புற சிறார்கள் சாதித்து காட்டியுள்ளனர். இவர்களில் ஒருவர் சித்தலிங்கம்மா.ராம்நகரின், காகிமடு கிராமத்தில் வசிப்பவர் சித்தலிங்கம்மா என்ற ஷோபா, 16. இவர் இதே கிராமத்தின், அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். இவர் நடுத்தர வர்க்கத்தின் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சித்தகங்கையா, தாய் லட்சுமம்மா விவசாய வேலை செய்கின்றனர்.மேல்நிலை பள்ளியில் இருந்த போது, விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்து கொண்டார். விளையாட்டில் இவரது ஈடுபாட்டை கவனித்த விளையாட்டு ஆசிரியர் நவீன்குமார், தலைமை ஆசிரியர் கஜானனா, ஷோபாவுக்கு பயிற்சி அளித்தனர். இதன் பயனாக ஷோபா தடகள போட்டிகளில் சாதனை செய்து, மக்களின் கவனத்தை ஈர்த்தார். இரண்டு முறை மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டார். தற்போது மூன்றாவது முறை தேர்வாக, தன்னை தயார்படுத்துகிறார்.கடந்த 2022 - 23ம் ஆண்டு, மைசூரில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டிகளில், உயரம் தாண்டுதலில் மூன்றாம் இடத்தை பிடித்தார். தற்போது தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ள இவர், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தயாராகிறார்.ஷோபா கூறியதாவது:மற்ற பெற்றோரை போன்று, என் பெற்றோர் விளையாட்டால் பயனில்லை என, கூறவில்லை. கல்வியை போன்று விளையாட்டும் முக்கியமானது என, என் ஆசிரியர் என்னை ஊக்கப்படுத்தினார். என் பெற்றோரும் ஒத்துழைப்பு அளித்தனர். என்னால் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடிந்தது.தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது, என் கனவாகும். இதற்கு என் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் உதவியாக உள்ளனர். என் கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஆசிரியர் நவீன்குமார் கூறியதாவது:மாணவி சித்தலிங்கம்மாவின் விளையாட்டு திறமையை அடையாளம் கண்டு, ஊக்கப்படுத்தினோம். பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இவரது சாதனையை அடையாளம் கண்டு, பல அமைப்புகள், சங்கங்கள் அவரை பாராட்டி கவுரவித்துள்ளன.இவரை போன்ற விளையாட்டு வீரர்களுக்கு, வழிகாட்டுதல் அவசியம். அவரது திறமை மற்றும் உழைப்புக்கு ஏற்றபடி வாய்ப்புகள் கிடைத்தால், இவரை போன்ற சிறார்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்களாக வளர்வர்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -