உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., தலைவர்களுக்கு தடை முதல்வர் தொகுதியில் அதிரடி

காங்., தலைவர்களுக்கு தடை முதல்வர் தொகுதியில் அதிரடி

மைசூரு: 'சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், எங்கள் கிராமத்துக்குள் காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுமதியில்லை' என, முதல்வரின் வருணா தொகுதி மக்கள் வைத்துள்ள போர்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, வருணா தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா, 'ஆட்சிக்கு வந்த பின், நகர்லே கிராமத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்படும்' என உறுதி அளித்திருந்தார். அதுபோன்று தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சியையும் பிடித்தது.தேர்தல் வாக்குறுதி குறித்து முதல்வரிடமும், மாவட்ட பொறுப்பு வகிக்கும் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பாவிடமும் கிராம மக்கள் முறையிட்டனர். அதன்பின் 3 லட்சம் ரூபாய் செலவில் அம்பேத்கர் சிலை நிறுவ, முதல்வரின் மகன் யதீந்திரா அடிக்கல் நாட்டினார்.பின், கிராமத்தில் சிலை நிறுவ 20 லட்சம் ரூபாய் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு, 3 லட்சம் ரூபாய் மட்டுமே தரப்படும் என கூறியதால், அதிருப்தி அடைந்தனர். இதனால் கோபம் அடைந்த கிராம மக்கள், தங்கள் கிராமத்தின் எல்லை உட்பட கிராமத்தின் பல பகுதிகளில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அதில், 'நகர்லே கிராமத்தின் காங்கிரஸ் தலைவர்கள் திறமையற்றவர்கள். எந்த ஒரு காங்கிரஸ் தலைவருக்கும், கிராமத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவியது. இதை பார்த்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள், அந்த அறிவிப்பு பேனர்களை அகற்றி விட்டனர். முதல்வரின் சொந்த தொகுதியில், காங்கிரஸ் தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை