துபாய் செல்லும் விமானத்தில் திடீர் கோளாறு! உரிய நேரத்தில் கண்டுபிடித்த பைலட்டுகள்
கோழிக்கோடு: தொழில்நுட்ப கோளாறு காரணமாக துபாய் செல்ல வேண்டிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இன்று காலை 8.15 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள், விமானிகள், விமான சிப்பந்திகள் இருந்தனர். துபாய்க்கு இந்த விமானம் சரியாக முற்பகல் மணி 11.05க்கு சென்று சேர வேண்டும். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, விமானம் உடனடியாக கோழிக்கோடு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கவிடப்பட்டு பயணிகள் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது; விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அனைவருக்கும் காத்திருப்பு அறைகளில் வேண்டிய ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் கோளாறை கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. கோளாறை சரி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்தும் முடிந்து, பயணிகளுக்கான சேவை தொடங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.