| ADDED : நவ 18, 2024 12:22 AM
புதுடில்லி: டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு பிரச்னை மிகவும் தீவிரமடைந்துள்ளது. காற்று தர குறியீட்டின்படி, நேற்று காலை 457 என்ற அளவுக்கு மிகவும் மோசமான நிலையை எட்டியது. மத்திய அரசின் காற்று தரத்தை ஆய்வு செய்யும் குழு, கிராப் - 4 எனப்படும் நான்காம் கட்ட கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று முதல் டில்லியில் உள்ள பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, அனைத்து வகையிலான அரசு திட்ட கட்டுமானப் பணிகளுக்கும், டிரக்குகள் டில்லிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றி வரும் டிரக்குகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.