உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விருந்தில் மதுபானம்; தட்டிக்கேட்ட போலீசுக்கு அடி தொழிலதிபர் கைது

விருந்தில் மதுபானம்; தட்டிக்கேட்ட போலீசுக்கு அடி தொழிலதிபர் கைது

சூரத்: குஜராத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக காரில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்திருந்ததுடன், சோதனை செய்ய முயன்ற போலீசாரையும் தாக்கிய வழக்கில் பிரபல தொழிலதிபர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் மது விலக்கு சட்டம் அமலில் உள்ளதால், மதுபானங்களை விற்பது, பயன்படுத்துவது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தின் சூரத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில், கடந்த 16ம் தேதி இரவு பிரபல தொழிலதிபர் சமீர் ஷாவின், 19 வயது மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானங்கள் பயன்படுத்தப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனை இதைத்தொடர்ந்து அங்கு ரோந்து சென்ற போலீசார், சொகுசு ஹோட்டல் அருகே நின்றிருந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த இளைஞர் ஒருவர், மொபைல் போனில் வீடியோ பதிவு செய்த போலீசாரை தாக்கியதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே, காரில் இருந்து இறங்கிய இரண்டு பெண்கள், 'அவன் ஒரு சிறுவன்; விட்டுவிடுங்கள்' என கேட்டுக்கொண்டனர். இதேபோல் தொழிலதிபர் சமீர் ஷாவும் காரில் இருந்து இறங்கி, போலீசாரை மிரட்டும் தொனியில், 'நான், உங்கள் உயரதிகாரிகளை நன்கு அறிவேன்; அவர்களிடம் பேசுகிறேன்' எனக் கூறியுள்ளார். எனினும், அதை பொருட்படுத்தாமல், அவர்களின் காரை சோதனையிட்டனர். இதில், 1,350 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து காரை பறிமுதல் செய்தனர். நடவடிக்கை இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, தொழிலதிபர் மற்றும் அவரது மகன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் நிதி தாக்கூர் கூறுகையில், “காரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்தது தொடர்பாக தொழிலதிபர் சமீர் ஷா மற்றும் மது பாட்டில்களை சப்ளை செய்த நபர் என, இரண்டு பேரை கைது செய்துள்ளோம். “போலீசார் மீது தாக்குதல் நடத்திய தொழிலதிபரின் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்தினாரா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய அவரது ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். அதன்பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ