தென்கிழக்கு ஆசியாவில் கூட்டணி வலுவாகிறது: பிலிப்பைன்ஸ் அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் வலுவான கூட்டணியை உருவாக்க இந்தியா தீவிரமாக உள்ளது. அந்த வகையில், ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச உள்ளார். இதற்கிடையே, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அவரை சந்தித்துப் பேசினார். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் நல்ல உறவை இந்தியா கொண்டுள்ளது. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் உடனான துாதரக உறவு, 75 ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டியும், இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். நம் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார். விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது. நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிலிப்பைன்ஸ் அதிபரை நேற்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இன்று டில்லியில் உள்ள மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ், பின்னர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச உள்ளார். மேலும், இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையேயான ஆலோசனையும் நடைபெற உள்ளது. அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க உள்ளார். சீனா - ரஷ்யா பயிற்சி ரஷ்யா மற்றும் சீன கடற்படைகள், ஜப்பான் அருகே, மூன்று நாள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளுடன், சமீப காலமாக சீனாவும் ரஷ்யாவும், ராணுவ ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இந்த பயிற்சி நடந்துள்ளது.
கடற்படைகள் கூட்டு பயிற்சி
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் மற்றும் கடல் வளங்களுக்கு சீனா உரிமை கோருகிறது. இதில் தங்களுக்கும் உரிமையுள்ளதாக பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனே, தைவான் உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. இதனால், அப்பகுதியில் சீனா தனது ராணுவ இருப்பையும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், தென் சீனக் கடற் பகுதியில், பிலிப்பைன்ஸ் உடன் இந்தியா இரண்டு நாள் கூட்டு ராணுவ கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டது. இதற்காக நம் கடற்படை கப்பல்களான ஐ.என்.எஸ்., டில்லி, சக்தி மற்றும் கில்டன் ஆகியவை பிலிப்பைன்ஸ் சென்றுள்ளன.