உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசுக்கு நெருக்கமான அமித் கரே துணை ஜனாதிபதியின் செயலராக நியமனம்

மத்திய அரசுக்கு நெருக்கமான அமித் கரே துணை ஜனாதிபதியின் செயலராக நியமனம்

நாட்டின் துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற நிலையில், மத்திய அரசுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் கரே அவரது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்ததன் காரணமாகவே, ஜக்தீப் தன்கர் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நேரிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் உடன், அப்படியொரு கருத்து மோதல் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. இதற்காக தங்களுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அமித் கரேவை, துணை ஜனாதிபதிக்கான செயலராக மத்திய உள்துறை அமைச்சர் அ மித் ஷா நியமித்துள்ளார் .

யார் இவர்?

பீஹாரில் லாலு முதல்வராக இருந்தபோது நடந்த மாட்டுத் தீவன ஊழலை கண்டுபிடித்து அம்பலப்படுத்தியவர் தான் இந்த அமித் கரே. அதற்கான கோப்புகளை அவர் சமர்பித்ததால் தான் மாட்டுத் தீவனம் மூலம், 950 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது வெளியே தெரிந்தது. அதன்பின், இவ்வழக்கில் சிக்கிய பீஹாரின் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், டாக்டர் ஜெகன்னாத் மிஸ்ரா, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான சஜல் சக்கரவர்த்தி, மகேஷ் பிரசாத் மற்றும் பெக் ஜூலியஸ் ஆகியோர் சிறை செல்ல நேரிட்டது. பீஹாரில் இருந்து ஜார்க்கண்ட் தனி மாநிலம் உதயமாவதற்கு முன்பாக, தர்பங்கா மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றி இருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலம் உருவானதும், அம்மாநில கவர்னர் வேத் மர்வாவின் முதன்மை செயலராகவும் பணியாற்றிய அனுபவமிக்கவர். மத்திய அரசு பணிக்காக டில்லிக்கு மாற்றலாகும் வரை, ராஞ்சி பல்கலை.,யின் துணை வேந்தராகவும் செயல்பட்டுள்ளார். மத்திய அரசில், கல்வித் துறை செயலராகவும் பதவி வகித்தார். புதிய கல்வி கொள்கையை வகுத்ததில் முக்கிய பங்காற்றியவர். தற்போது, பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் மோடியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இவரை ஒப்பந்த அடிப்படையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நியமித்து உள்ளது. அதன்படி, பொறுப்பேற்ற நாள் முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு துணை ஜனாதிபதியின் செயலராக அமித் கரே தொடர்வார். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Venugopal S
செப் 16, 2025 11:05

துணை ஜனாதிபதியே மத்திய பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமானவர் தானே, அப்புறம் அவர் உதவியாளர் மட்டும் எப்படி நெருக்கமானவராக இல்லாமல் இருப்பார்?


KOVAIKARAN
செப் 16, 2025 07:31

இந்த அதிகாரி, மிகவும் நேர்மையாக பல்வேறு பதவிகளிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். அவர் திறமையான அதிகாரி என்பதற்காக மட்டுமல்ல, அவர் ஒரு நேர்மையான அதிகாரி என்ற காரணத்தினால், அவர் PMO அலுவலகத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளார். துணை ஜனாதிபதி C பி ராதாகிருஷ்ணன் அவர்கள் நேர்மை, ஒழுக்கம் உள்ளவர். அதனால் அவர் கேட்டுக்கொண்டபடிதான் இந்த அதிகாரியை பிரதமர் அவர்கள் துணை ஜனாதிபதியின் செயலாளராக நியமித்துள்ளார். இது ஏற்பாடு இரட்டைப் பயன்களைக் கொடுக்கும் என்பதால்.


புதிய வீடியோ