உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர்களை தடுக்க பவுன்சர்களை நியமிப்பதா? பள்ளி நிர்வாகத்துக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்

மாணவர்களை தடுக்க பவுன்சர்களை நியமிப்பதா? பள்ளி நிர்வாகத்துக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்

புதுடில்லி:'கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிக்குள் நுழைவதை தடுப்பதற்கு, 'பவுன்சர்'களை நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; இதுபோன்ற நடவடிக்கைககள் மாணவர்களுக்கு மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்' என, டில்லியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லி துவாரகா பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி, நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. கூடுதல் கட்டணத்தை செலுத்தாத 30 மாணவர்களை அப்பள்ளி நிர்வாகம், பள்ளியில் இருந்து நீக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில், 102 பெற்றோர்கள் முறையிட்டனர். இதுதொடர்பாக அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியதாவது: அங்கீகரிக்கப்படாத கட்டணங்களை செலுத்தும்படி எங்கள் குழந்தைகள் தொடர்ந்து கட்டாயப்படுத்தப்படுகின்றனர். கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை என கூறி, 30 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளனர். இவர்கள் பள்ளிக்குள் நுழைவதை தடுக்க, பவுன்சர்களை நியமித்து மனிதாபிமானமற்ற நடைமுறைகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தில், அடிப்படை கட்டணம் உட்பட, 50 சதவீத கட்டணத்தை செலுத்தும்படி, பெற்றோருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு, நீதிபதி சச்சின் தத்தா தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 30 மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கிய உத்தரவை திரும்பப் பெறுவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:ஆசிரியர்களுக்கான சம்பளம், பள்ளியில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்காக, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணத்தை நிர்ணயிக்க பள்ளிக்கு உரிமை உள்ளது. அதே நேரத்தில், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் போல் செயல்படுவதை ஏற்க முடியாது. கல்வி நிலையங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வேறுபாடு உண்டு. கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிக்குள் நுழைவதை தடுக்க, பவுன்சர்களை நியமிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கும். கல்வி நிலையங்களில் இதுபோன்ற நடவடிக்கைளுக்கு ஒருபோதும் இடம் அளிக்க முடியாது. இதுபோன்ற தவறான நடவடிக்கைகள் குழந்தைகளின் கண்ணியத்தை சீர்குலைப்பதுடன், சமூகத்தில் பள்ளிகள் பற்றிய தவறான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி விடும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ