உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தயாரிப்பு அம்சங்கள், மேம்பாடுகளால் ஈர்க்கப்படும் அட்டகாச அரட்டை செயலி

தயாரிப்பு அம்சங்கள், மேம்பாடுகளால் ஈர்க்கப்படும் அட்டகாச அரட்டை செயலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மெசேஜிங் செயலிகளில் முன்னணியில் இருப்பது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் தான். இந்தியாவிலும் பரவலாக இந்த செயலிகளையே மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அப்படியிருக்கையில், சாப்ட்வேர் நிறுவனமான ஸோகோ, மெசேஜிங் செயலி ஒன்றை உருவாக்கியது. 'அரட்டை' என பெயரிடப்பட்டுள்ள இச்செயலி, 2021ல் அறிமுகமானாலும், ஆரம்பத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 300 டவுன்லோடு மட்டுமே ஆனது. தற்போது இச்செயலி பற்றி பலருக்கும் தெரியவந்த நிலையில், திடீரென பயனர்களின் எண்ணிக்கை விர்ரென உயர்ந்தது. மத்திய அமைச்சர்களின் பரிந்துரை மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்டது போன்ற காரணங்களால் தற்போது 1 மில்லியன் டவுன்லோடுகளை தாண்டி, இந்தியாவில் 'டாப் ரேங்க்'ல் உள்ள செயலிகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளை முந்தி, ஆப்பிளின் ஆப் ஸ்டோர், ஆண்ட்ராய்டின் ஆப் ஸ்டோர்களில் முன்னணி இடங்களை பிடித்துள்ளது.இந்த அரட்டை செயலி உருவாக்கத் தலைமை பொறுப்பாளரான ஜெரி ஜான், 'அரட்டை' குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அரட்டை உருவானது எப்படி?

2006ல் எங்களின் பிஸ்னஸ் வசதிகளுக்காக 'ஸோகோ சாட் (Zoho Chat - பின்னர் Zoho Cliq) உருவாக்கப்பட்டது. அதிலிருந்து பெற்றுள்ள அனுபவத்தை வைத்து 2021ல் பயனர்களுக்கான செயலியாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இதற்கான தொழில்நுட்ப சவால்கள், பிஸ்னஸ் மற்றும் பயனர்களுக்கான வித்தியாசங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து 'ஸோகோ' ஸ்டைலில் ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரட்டை உருவானது.

2021ல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை என்னென்ன மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

தொடக்கத்தில் இது ஒரு அடிப்படை செயலி ஆக இருந்தது. பின்னர் சிறுசிறு பயனர் அனுபவங்களை (UX) மாற்றியது முதல் நுணுக்கமான மேம்பாடுகளையும் சரி செய்தோம். தற்போது வலை செயலியும் (web app) வந்துள்ளது. சேனல்களின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரட்டை செயலியில் பணிபுரியும் குழுவின் அளவு என்ன? பயனாளர் அதிகரிப்பை எவ்வாறு கையாளுகிறீர்கள்?

குழுவின் எண்ணிக்கை பொதுவாக மாறும் தன்மை கொண்டது. கடந்த 4 ஆண்டுகளாக தயாரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மட்டத்தில் முடிந்தவரை தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறோம். தலைமை அதிகாரி, தரநிலை குழுக்கள், டெவலப்பர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் கையாள்கிறோம். தகவல் தொழில்நுட்ப வசதிகளும் விரிவாக்கப்பட்டுள்ளன.

இந்த செயலி முழுமையாக என்க்ரிப்ட் (end-to-end encrypt) செய்யப்பட்டதா?

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்பது, ஒரு செய்தியை அனுப்புபவர் முதல் பெறுநர் வரை யாரும் படிக்க முடியாதபடி பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு முறையாகும். தற்போது இந்த விஷயத்தில் தான் முழுமையாக பணியாற்றி வருகிறோம். பயனர்களின் தனித்தகவல்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம். ஏற்கனவே ஆடியோ மற்றும் வீடியோ கால்களில் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டுவிட்டது. மற்ற பிரிவுகளுக்கும் இந்த வசதிகளை விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அதேபோல், வாக்கெடுப்பு (Poll) மற்றும் யுபிஐ போன்றவற்றை கொண்டு வரவும் பணியாற்றி வருகிறோம்.

ஏ.ஐ மற்றும் Zia LLM போன்ற அம்சங்கள் அரட்டையில் வருமா?

Zia LLM என்பது எங்கள் பிஸ்னஸ் பயன்பாடுகளுக்கே உருவாக்கப்பட்டது. எனவே அதனை உடனடியாக இந்த பயனர் செயலில் கொண்டுவரும் திட்டம் இல்லை. இருப்பினும், ஏ.ஐ மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்த பல முயற்சிகள் செய்யப்படும்.

இந்தியாவில் வாட்ஸ்அப்.,க்கு மாற்றாக அரட்டை வெற்றிபெறும் என நினைக்கிறீர்களா?

ஒரு தயாரிப்பு வாடிக்கையாளருக்கு மதிப்புமிக்கதாக இருந்தால், பயனர்கள் எப்போதும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் உலகத் தரத்துக்கேற்ப செயலியை உருவாக்க முயல்கிறோம். போட்டி எப்போதும் வளர்ச்சிக்கான மற்றும் புதுமைகளை உருவாக்க ஊக்கமாக இருக்கும்.

'அரட்டை'யின் எதிர்கால திட்டங்கள் என்ன? 'அரட்டை' என்ற பெயரை மாற்றுவீர்களா?

பயனாளர் நம்பிக்கையை உருவாக்கும் வகையில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். பெயரை மாற்றும் திட்டமில்லை. உலகின் பல பிராண்டுகளும் பல்வேறு மொழிகளில் உள்ள பெயர்களில் தான் பிரபலமாகியுள்ளன. அதேபோல், அரட்டை என்ற பெயரும் பிரபலமாகும் என நம்புகிறோம். 'சிற்றுரையாடல்' (chit-chat) என்ற அர்த்தம் உள்ள 'அரட்டை' சிறந்த பெயர்தான்.

தகவல் பாதுகாப்பு மற்றும் அரசு அனுமதிக்கான பேக்-டோர் அம்சங்கள் குறித்து உங்கள் நிலை என்ன?

பயனரின் தரவுக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம். அரசின் ஐ.டி விதிமுறைகளை மதிக்கிறோம். ஆனால், பயனரின் தரவுகளை எப்போதும் மூன்றாம் தரப்பினருடன் பகிர மாட்டோம். விளம்பர ஆதாரமான வருவாய் முறைமையையும் பின்பற்ற மாட்டோம். ஒரு தேசபக்தி கொண்ட நிறுவனமாக இருப்பது மட்டுமல்லாமல், எங்கள் தயாரிப்பு திறன்கள் மற்றும் எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) மையமாகக் கொண்ட வளர்ச்சி ஆகியவை எங்கள் அடையாளமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.இவ்வாறு ஜெரிஜான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

N Annamalai
அக் 02, 2025 20:00

வெற்றி பெற வாழ்த்துக்கள்


Field Marshal
அக் 02, 2025 14:33

உலக அளவில் வெற்றிபெற அரட்டை என்கிற பெயர் சரியாக இருக்குமா ?


visu
அக் 02, 2025 14:56

ஹ்ம்ம் சரியான கேள்வி உலக நாடுகளின் ஆதரவை பெற பெயர் அனைவருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்


Ramesh Trichy
அக் 02, 2025 17:41

Whatsup என்பது முதலில் ப்ரபலமாக இருக்கவில்லை , Ola என்ற Spanish சொல் இந்தியாவில் பிரபலமாக ஆகவில்லையா? 25 ஆண்டுகளுக்கு முன் Yahoo, Google என்ற பெயர் யாருக்காவது அறிமுகம் இருந்ததா?


Field Marshal
அக் 02, 2025 19:55

Google Yahoo WhatsApp விரைவில் பிரபலம் ஆனவை ..Ola ஸ்பானிஷ் வார்த்தையாயிருந்தாலும் தமிழர்கள் சுலபமாக புரிந்து கொண்டார்கள்


உண்மை கசக்கும்
அக் 02, 2025 13:45

ஸ்ரீதர் வேம்பு , ஜான் மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்


Field Marshal
அக் 03, 2025 10:25

ஒரு மார்கதரிசியை விட்டுட்டீங்களே


Ravi Prasad
அக் 02, 2025 13:34

Hope it should be like one more ‘Koo’ social media platform with lot of hype


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை