வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ராணுவம் தாக்குதல் நடத்தவேண்டும் என்று மோடியிடம் அழுதது போல் ஒரு மாயையை கிளப்பிவிடுகிறார்கள்
புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில், நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ''எங்கு, எப்போது, எந்த இலக்கை தாக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், 26 சுற்றுலா பயணியரை கொடூரமாக சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என, பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
இதில், பிரதமர் மோடி பேசியதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது:பயங்கரவாதத்தை வேருடன் ஒழிப்பதில் நாடு உறுதியுடன் உள்ளது. நம் முப்படைகளின் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எங்கு, எப்போது, எந்த இலக்கை தாக்க வேண்டும் என்பது குறித்து தீர்மானிக்க பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்குகிறேன். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கூட்டத்திற்கு பின், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டமும் நேற்று நடந்தது. இதில் சாலை போக்குவரத்து, சுகாதாரம், வேளாண், ரயில்வே உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து பொருளாதார விவகாரங்களுக்கான கமிட்டியும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்துடனும், பிரதமர் மோடி நேற்று இரவு ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு அளிக்கப்போகும் பதிலடி குறித்து, அடுத்தடுத்து நடந்த இந்த கூட்டங்களில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், எந்த நேரத்திலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, நம் ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என தெரிகிறது. அவசர கூட்டம்
மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் தலைமையில், உயர்மட்ட கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில், பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி, என்.எஸ்.ஜி., எனப்படும், தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் பிரிகு ஸ்ரீனிவாசன், அசாம் ரைபிள்ஸ் படையின் இயக்குநர் ஜெனரல் விகாஸ் லக்கேரா ஆகியோர் பங்கேற்றனர்.
பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள, 'ஜிப் லைன்' எனப்படும், கம்பியில் தொங்கிச் செல்லும் விளையாட்டை நடத்தி வரும் முசாமில், மூன்று முறை மத கோஷம் எழுப்பிய பிறகே துப்பாக்கிச் சூடு நடந்ததாக சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்தார். அதை அவர் படமாக்கி உள்ளார். ஆனால், 'ஆபத்தான நேரத்தில் இதுபோல் மத கோஷம் எழுப்புவது வழக்கமானது தான்' என, முசாமில் தந்தை கூறியுள்ளார். இது தொடர்பாக ஜிப் லைன் ஆப்பரேட்டரிடம் என்.ஐ.ஏ,. அதிகாரிகள் விசாரணை நடக்கிறது. மேலும், தாக்குதல் நடந்த தினத்தில், அங்கிருந்த சிற்றுண்டி கடைகளுக்கு பின் பகுதியில், பயங்கரவாதிகள் முன்கூட்டியே வந்து அமர்ந்திருந்ததாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
பஹல்காம் தாக்குதலை முன்னின்று நடத்தியவன் ஹசிம் மூசா. இவன் பாகிஸ்தானின் எஸ்.எஸ்.ஜி., எனப்படும் அதிரடிப்படையில் கமாண்டோ பயிற்சி பெற்றவன். வழக்கத்துக்கு மாறான சிறப்பு பயிற்சி அளித்து அவனை தயார் செய்த பாக்., ராணுவம், திடீரென அவனை டிஸ்மிஸ் செய்தது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து, காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்காகவே அவனை ராணுவம் தயார் செய்து, பின்னர் டிஸ்மிஸ் செய்தது என்ற உண்மை இப்போது தெரிந்துள்ளது. விஷயம் அம்பலமானால், மூசாவுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று மறுக்க வசதியாக இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.
ராணுவம் தாக்குதல் நடத்தவேண்டும் என்று மோடியிடம் அழுதது போல் ஒரு மாயையை கிளப்பிவிடுகிறார்கள்