உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உடல் உறுப்பு தானம் பதிவு நாட்டிலேயே பல்லாரி முதலிடம்

உடல் உறுப்பு தானம் பதிவு நாட்டிலேயே பல்லாரி முதலிடம்

பல்லாரி: உடல் உறுப்பு தானம் பதிவில், நாட்டிலேயே இந்த ஆண்டு பல்லாரி முதலிடத்தில் உள்ளது. இதுவரை 5,024 பேர் பதிவு செய்துள்ளனர்.ஒருவர் இறக்கும்போது, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதால், பலருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதனால், உடல் உறுப்பு தானம், மிக உயரியதாக கருதப்படுகிறது.தானமாக கிடைத்த உடல் உறுப்புகள் மூலம் மறுவாழ்வு பெற்றவர்கள் இவ்வுலகில் ஏராளம். இதனால் உடல் உறுப்பு தானம் அவசியம் குறித்து, சுகாதார துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை, உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்ததில், கர்நாடகாவின் பல்லாரி மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தில் 5,024 பேரும், தார்வாட் மாவட்டத்தில் 3,745 பேரும் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவில் மொத்தம் 25,658 பேர் பதிவு செய்துள்ளனர்.உடல் உறுப்பு தானம் பதிவில் பல்லாரி மாவட்டம் முதலிடம் பிடித்ததால், அம்மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அலுவலர் ரமேஷ் பாபு கூறியதாவது:உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம். பெரும்பாலும் பள்ளி, கல்லுாரிகளில் தான் அதிகம் நடத்தினோம். மாதம் 500 பேர், உடல் உறுப்பு தானம் பதிவு செய்ய வைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தோம்.உடல் உறுப்பு தானம் பற்றி இன்னும் பலர் அறியவில்லை. நன்கு படித்தவர்கள் தான், உடல் உறுப்பு தானத்தை எதிர்க்கின்றனர். இதையெல்லாம் மீறி நாட்டிலேயே பல்லாரி முன் உதாரணமாக திகழ்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை