பேனர் பாக்ஸ்
தொண்டு நிறுவனங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! * மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘எப்.சி.ஆர்.ஏ.,’ எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா – 2026ன் படி, எப்.சி.ஆர்.ஏ., பதிவு ரத்தானாலோ, புதுப்பிக்கப்படாமல் போனாலோ, அந்நிறுவனங்களின் சொத்துகளை நிர்வகிக்க, விற்க, மத்திய அரசு தனியாக ஒரு அதிகார அமைப்பை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது * எப்.சி.ஆர்.ஏ., பதிவு ரத்தானால் தொண்டு நிறுவனங்கள் உடனடியாக மூடப்படும் என்பது தவறான புரிதலாகும். * இந்த அனுமதி ரத்தானால் வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெறவதற்கான சட்டப்பூர்வ உரிமையை மட்டுமே தொண்டு நிறுவனம் இழக்கும் * சங்கம், அறக்கட்டளை, தன்னார்வ தொண்டு நிறுவன சட்டங்களின் அடிப்படையில் அந்த அமைப்புகள் தொடர்ந்து இயங்கலாம் * உள்நாட்டு நன்கொடைகள், சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதி, உறுப்பினர்களின் பங்களிப்பு ஆகியவற்றை கொண்டு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் காப்பகங்களை தொடர்ந்து நடத்த முடியும் * எப்.சி.ஆர்.ஏ., பதிவு காலாவதியாகும் பட்சத்தில், வெளிநாட்டு நன்கொடை மூலம் உருவாக்கப்பட்ட பள்ளி கட்டடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகளிர் தங்கும் விடுதிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மறுவாழ்வு மையங்கள் அரசால் நியமிக்கப்பட்ட புதிய அதிகாரம் கொண்ட அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்துவிடும் * அதே சமயம் முற்றிலும் உள்நாட்டு நிதியால் உருவாக்கப்பட்ட சொத்துகளை அரசு தனிச்சையாக பறிமுதல் செய்ய முடியாது * பல தொண்டு நிறுவனங்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நன்கொடைகளை கலந்து சொத்துகளை உருவாக்கி இருப்பதால், அவற்றை பிரித்து அறிவதில் சிக்கல் நீடிக்கிறது * தொண்டு நிறுவனங்கள் முடங்கினாலும், உரிமத்தை இழந்தாலும் வெளிநாட்டு நன்கொடையில் உருவாக்கப்பட்ட சொத்துகள் வெளிப்படைத்தன்மையுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது * வெளிநாட்டு நிதியில் உருவாக்கப்பட்ட சொத்துகள் முறையாக கண்காணிக்கப்படவும், தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கவும் இந்த சட்டம் அவசியம் என்கிறது மத்திய அரசு