உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரெட்டி கைதை கண்டித்து பெல்லாரியில் "பந்த்

ரெட்டி கைதை கண்டித்து பெல்லாரியில் "பந்த்

பெல்லாரி: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைதை கண்டித்து, பெல்லாரியில், 'பந்த்' அனுஷ்டிக்கப்பட்டது. கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க ரெட்டி சகோதரர்களில், இரண்டாவது நபரான ஜனார்த்தன ரெட்டியை, சி.பி.ஐ., கைது செய்து, ஐதராபாத் சிறையில் அடைத்துள்ளதால், பெல்லாரியில் நேற்று பந்த் அனுஷ்டிக்கப்படும் என, பா.ஜ., கட்சியினர் அறிவித்திருந்தனர். பெல்லாரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ரெட்டி பிரதர்ஸ் ஆதரவாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த நான்கு கம்ப்யூட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. துணை பிரிவு அதிகாரி அலுவலகம், வருவாய்த் துறை, தொழிலாளர் அலுவலகம், ஆர்.டி.ஓ., என, பல பிரிவுகளிலும் ரெட்டி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பகுதிகளில், கடைகள் மீது கல்வீசி தாக்கினர். அலுவலக கண்ணாடிகள், அடித்து நொறுக்கப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த போலீசார், அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். நகரின் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், கடைகள் மூடப்பட்டன. வங்கிகள் உட்பட, அனைத்து இடங்களிலும் வழக்கமான நடவடிக்கைகள் ஒட்டு மொத்தமாக ஸ்தம்பித்தது. ரோட்டில் பஸ்கள் விடப்படாததால், வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. நேற்று காலையிலிருந்தே பா.ஜ., தொண்டர்கள், ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர்கள் கும்பல், கும்பலாக நகரின் முக்கிய ரோடுகளில், மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போக்குவரத்து, வங்கி அலுவல்கள் ஆகியவை ஸ்தம்பித்ததால், பொது மக்கள் மிகவும் இன்னலுக்குள்ளாகினர். பஸ் நிலையங்களில் பெருமளவில் மக்கள், பஸ்சுக்காக காத்திருந்து ஏமாந்தனர். ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளர் ஒருவர், தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், போலீசாரின் உடனடி நடவடிக்கையால், தற்கொலை தடுக்கப்பட்டது. தற்கொலைக்கு முயற்சித்தவரை போலீசார் கைது செய்தனர். நகர் முழுவதும் போலீசார், எவ்வித அசம்பாவிதமும் நடக்காத வகையில், கடும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை