பெங்களூரு: கர்நாடகாவில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த விவகாரத்தில், கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சிறையின் தலைமை கண்காணிப்பாளர் சுரேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இரு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உத்தரவிட்டுள்ளார். சிறையை நிர்வகிக்க முதன்முறையாக ஐ.பி.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், 2,200 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும். அப்படி இருக்கும்போது, தற்போது 5,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதிக அளவில் கைதிகள் இருப்பதால், அவர்களை கண்காணிப்பதில் சிறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கைதிகளிடமோ அவர்களின் உறவினர்களிடமோ சில ஊழியர்கள் பணம் வாங்கிக் கொண்டு விலை போகின்றனர். கைதிகளுக்கு தேவையானதை வெளியே இருந்து வாங்கிக் கொடுக்கின்றனர். இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி ஜுகாத் சகீல் மன்னா, பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற உமேஷ் ஷெட்டி, தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் காதலன் தருண் ஆகிய முக்கிய கைதிகள், மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோக்கள், சில நாட்களுக்கு முன் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, சிறையில் நடக்கும் சட்டவிரோதங்களை தடுப்பது பற்றி, மாநில சிறைத்துறை தலைமை அலுவலகத்தில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின், பரமேஸ்வர் அளித்த பேட்டி: பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்த வீடியோ வெளியான நிலையில், முதற்கட்ட விசாரணை அடிப்படையில், பணியில் அலட்சியமாக இருந்த சிறை தலைமை கண்காணிப்பாளர் சுரேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறை கண்காணிப்பாளர் மகேரி, உதவி கண்காணிப்பாளர் அசோக் பஜந்திரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சிறைக்குள் என்ன நடக்கிறது என்று இன்னும் ஆழமாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கூறி இருக்கிறேன். அறிக்கை கிடைத்ததும் தவறு செய்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வதா அல்லது பணி நீக்கம் செய்வதா என்று முடிவு எடுப்போம். பரப்பன அக்ரஹாரா சிறையை நிர்வகிக்க, முதன்முறையாக ஐ.பி.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆலோசனை முடிந்த சில மணி நேரங்களில், பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமை கண்காணிப்பாளராக, சிறை துறை எஸ்.பி., அன்ஷு குமாரை நியமித்து, அரசு உத்தரவிட்டது.