பீ ஹார் சட்டசபை தேர்தலில் லாலுவின் ஆர்.ஜே.டி., எனப்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தாலும், 23 சதவீத ஓட்டுகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. முன்னாள் முதல்வர் லாலுவின் ஆர்.ஜே.டி., கடந்த தேர்தலில், 75 இடங்களை வென்றிருந்த நிலையில், இந்த முறை வெறும் 25 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதே போல் கடந்த முறை, 19 இடங்களில் வென்ற காங்., இந்த முறை, 6 இடங்களில் மட்டுமே வென்றது. ஹைதராபாத் எம்.பி., அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. போட்டியிட்ட 238 தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே டிபாசிட் பெற்றது. 236 இடங்களில் அக்கட்சி டிபாசிட் இழந்தது. இந்நிலையில், தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் ஓட்டு சதவீதத்தில் லாலுவின் ஆர்.ஜே.டி., கட்சி, 23 சதவீத ஓட்டுகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பா.ஜ., 20.08 சதவீத ஓட்டுகளும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம். 19.25 சதவீத ஓட்டுகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. காங்., 8.71 சதவீத ஒட்டுகளை பெற்றது. அதே சமயம் கடந்த, 2020 தேர்தலை ஒப்பிடும்போது, ஆர்.ஜே.டி., 144 தொகுதிகளில் களமிறங்கி, 75 தொகுதி களில் வென்று 23.11 சதவீத ஓட்டுகள் பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த தேர்தலில் அதன் ஓட்டு சதவீதம் சற்றே சரிவு கண்டுள்ளது. கடந்த தேர்தலில், 110 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 19.46 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது. இந்த முறை 9 தொகுதிகள் குறைவாக, 101 தொகுதிகளில் போட்டியிட்டு, 20.08 சதவீத ஓட்டுகளை பெற்றது. இதன் மூலம் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதே போல், 2020 தேர்தலில், 115 தொகுதிகளில் போட்டியிட்டு, 15.39 சதவீத ஓட்டுகளை பெற்ற ஐக்கிய ஜனதா தளம், இந்த முறை, 101 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு, 19.26 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இதன் மூலம் நிதிஷ் கட்சியின் ஓட்டு சதவீதமும் கணிசமாக அதிகரித்துள்ளது.