உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுகிறார் பிரதமர் : பாரதிய ஜனதா பதிலடி

ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுகிறார் பிரதமர் : பாரதிய ஜனதா பதிலடி

புதுடில்லி : 'ஊழல் அமைச்சர்களை பிரதமர் மன்மோகன் சிங் காப்பாற்றுகிறார்' என, பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

நியூயார்க்கில் இருந்து டில்லி திரும்பும் வழியில், நேற்று முன்தினம், விமானத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 'இந்த நாட்டையும், அரசையும் சீர்குலைக்க சில சக்திகள் முற்பட்டுள்ளன. நாட்டில் முன்கூட்டியே லோக்சபா தேர்தலை நடத்த எதிர்க்கட்சியினர் அவசரப்படுகின்றனர்' என, குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று கூறியதாவது: '2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடியில், ராஜாவைப் போல குற்றம் புரிந்தவர், உள்துறை அமைச்சர் சிதம்பரம். ஊழல் அமைச்சர்களை பிரதமர் மன்மோகன் சிங் பாதுகாக்கிறார். மத்திய அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யவில்லை. அரசிற்குள் உள்ள முரண்பாடுகளால், அதுவே, தானாக கவிழ்ந்து விடும்.அரசை கவிழ்க்கும் அளவுக்கு எங்களிடம் எம்.பி.,க்கள் பலமும் இல்லை. '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக எல்லா விவரங்களும் பிரதமருக்கு தெரியும் என, அரசின் பைல்கள் மூலம் தெரியவந்துள்ளது. அவருக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை. '2ஜி' ஒதுக்கீடு மோசடி புகார்கள் தொடர்ந்து கொண்டிருப்பதால், அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்.

பிரதமர் அலுவலகத்திற்கு சமீபத்தில் மத்திய நிதியமைச்சகம் அனுப்பிய குறிப்பைப் பார்க்கும் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி, அமைச்சர் சிதம்பரத்திற்கு தெரியாமல் நடக்கவில்லை. அவரின் ஒப்புதலோடு தான் நடந்திருக்கிறது. ராஜா என்ன தவறு செய்தாரோ, அதே தவறை சிதம்பரமும் செய்துள்ளார். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு முரண்பாடான கூட்டணி தர்மத்தை பின்பற்றுகிறது. கூட்டணி கட்சியின் அமைச்சர் தவறு செய்தால், அவரை சிறையில் தள்ளுகிறது. அதேநேரத்தில், காங்கிரஸ், தன் அமைச்சர் தவறு செய்தால், அவரை காப்பாற்றுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சிகளை குறை சொல்வதற்குப் பதில், முதலில் தன் வீட்டைக் காப்பாற்ற வேண்டும். எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்திவிட்டு, அமைச்சர்களுக்கு நற்சான்று வழங்கக் கூடாது.

பொறுப்பான எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் கேள்விகள் கேட்கிறோம். அப்படி கேட்கும் எங்களை, அரசில் உள்ளவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். '2ஜி' விவகாரத்தில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

அருண் ஜெட்லி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் : அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யவில்லை. நாங்கள் அரசை கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை. அரசிற்குள் உள்ள முரண்பாடுகளால், அதுவே, தானாக கவிழ்ந்து விடும். சரியான தலைமை, நம்பகத்தன்மை இல்லாமல், மத்திய அரசு ஆட்டம் கண்டுள்ளது. ஊழல் அமைச்சர்கள் மீது பிரதமர் நம்பிக்கை வைத்தால், பிரதமர் மீது மக்கள் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் மத்தியில், எவ்வளவு கருத்து வேறுபாடு உள்ளது என்பதை, அன்னா ஹசாரேயின் போராட்டத்தை அவர்கள் கையாண்ட விதத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ