டில்லி ஐகோர்ட் வாசலில் குண்டு வெடிப்பு; 11 பேர் பலி; 76 பேர் காயம்
புதுடில்லி: டில்லி ஐகோர்ட் 5-வது கேட் அருகே இன்று காலை 10: 14 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 11 பேர் பலியானதாகவும் 66க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
டில்லி ஐகோர்ட்டில் வழக்கம் போல் இன்று காலை நீதிபதிகள், வக்கீல்கள் உள்ளிட்ட பலரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஐகோர்ட்டின் 5-வது கேட் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனையடுத்து கோர்ட் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில்11 பேர் பலியானார்கள். மேலும்76-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை சப்தர்ஜங், ராம் மனோகர் லோகியா ஆகிய மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் விரைந்தன.
சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சகம் நிலைமை குறித்து விவாதித்து வருகிறது. டில்லி போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார். ஒரு பிரீப்கேசில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ நடந்த இடத்தில் குண்டுவெடிப்பிற்கான தடயங்களை ஆய்வு செய்ய தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தேசிய பாதுகாப்புப்படையினர் (என்.எஸ்.ஜி), தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து வருகின்றனர்.
பார்லிமென்டில் கண்டனம்: குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பார்லிமென்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டு வெடிப்பு எதிரொலியாக ராஜ்யசபா 2 மணி வரையும், லோக்சபா 12.30 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வளையத்தில் டில்லி: குண்டுவெடிப்பு சம்பவத்தினை தொடர்ந்து டில்லி ஐகோர்ட் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லி முழுவதையும்போலீசார் தீவிர பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவந்துள்ளனர்.
2-வது முறை: கடந்த 4 மாதங்களில் டில்லி ஐகோர்டில் நடந்த 2-வது குண்டுவெடிப்பு என போலீசார் தெரிவிக்கி்ன்றனர். கடந்த மே மாதம் 25-ம் தேதி இதே போன்று டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டுவெடித்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் சிதம்பரம் விளக்கம்:குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பார்லிமென்டில் விளக்கமளித்தார். அப்போது அவர் பேசியதாவது: தலைநகரை குறிவைத்து தான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் நடத்திஉள்ளனர். கடந்த சில வருடங்களாக நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் டில்லி நகரினை குறித்து பலமுறை தாக்குதல் நடக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பார்லிமென்டில் கூறினார்.தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்..பிரதமர் கண்டனம்: டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் இது கோழைத்தனமான செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கூறினார்ஜனாதிபதி கண்டனம்: குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கண்டனம் தெரிவித்துள்ளார்.ரூ 4 லட்சம்: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் கூறினார்..ஹர்கத்-உல்ஜிகாதி பொறுப்பேற்பு: டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் ஹர்கத்-உல்-ஜிகாதி என்ற பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்பிருக்கலாம் என தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன்பு இ- மெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர். எனவே இந்த அமைப்பினர் தான் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறது.20 பேர் கொண்ட குழு அமைப்பு: டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஹர்கத்-உல்- ஜிகாதி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த 20 பேர் கொண்ட குழுவினை தேசிய புலனாய்வு அமைப்பான (என்.ஐ.ஏ) நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.குற்றவாளிகள் படம் வெளியீடு: டில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் சந்தேகிக்கப்படும் 2 குற்றவாளிகளின் வரைபடத்தை டில்லி போலீசார் வெளியிட்டுள்ளனர். 2 பேரில் ஒருவருக்கு வயது26 இருக்கலாம் எனவும், மற்றொரு நபருக்கு வயது 50 ஆக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.