ஒரே நாளில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடில்லி, அக். 15-'ஏர் இந்தியா, இண்டிகோ' ஆகிய விமான நிறுவனங்களின் மூன்று விமானங்களுக்கு, நேற்று ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விசாரணையில், அது வதந்தி என கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு, ஏர் இந்தியா விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணியர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விமானத்தில் தீவிர சோதனை நடத்தினர். அதில், வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. இதே போல், மும்பையில் இருந்து ஓமனின் மஸ்கட்டுக்கு செல்லவிருந்த விமானத்துக்கும், சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு புறப்படவிருந்த இண்டிகோ நிறுவனத்தின் விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த இரு விமானங்களும், தனிமைப்படுத்தப்பட்ட ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இறுதியில், வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து, ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் விசாரித்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், 300க்கும் மேற்பட்ட பயணியர் பாதிக்கப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.