ஐதராபாத் வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் பீதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மும்பை: சவுதி அரேபியாவில் இருந்து ஐதராபாத் வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர். இந்த அச்சுறுத்தலால் விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது; இன்று அதிகாலை 5.25 மணியளவில் விமானநிலைய செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்திற்கு ஒரு இமெயில் வந்தது. பபிதா ராஜன் என்ற பெயரில் வந்த அந்த இமெயிலில், 'ஐதராபாத்தில் விமானம் தரையிறங்குவதை தடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாதிகள் விமானத்தில் பயணிக்கின்றனர். 1984ல் சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்று ஐதராபாத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்,' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இதையடுத்து, அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு, விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இறுதியில், இது வெறும் புரளி என தெரிய வந்தது.இருப்பினும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், இவ்வாறு கூறினர்.