கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; பாலக்காடு அருகே 5 பேர் பலி
பாலக்காடு : பாலக்காடு அருகே, காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில், ஐந்து பேர் இறந்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோங்காடு பகுதி சேர்ந்தவர்கள் விஜேஷ், 35, விஷ்ணு, 28, ரமேஷ், 31, ஆப்சல், 17, மகேஷ், 17. நண்பர்களான இவர்கள், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு கோங்காடு பகுதியில் இருந்து, பாலக்காடு- - கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலை வழியாக, மண்ணார்க்காடு நோக்கி சென்றனர்.அப்போது, கனமழை பெய்ததால், கார் கட்டுப்பாட்டு இழந்து, எதிர் திசையில் கோவையை நோக்கி சென்ற லாரி மீது மோதியது. விபத்து ஏற்பட்டதும், அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.விபத்தில், காரின் முன் பக்கம் முழுமையாக சேதமடைந்தது. காரின் கதவுகளை உடைத்து உள்ளிருந்தவர்களை மீட்டனர். விஷ்ணுவை தவிர மற்ற நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பாலக்காடு அரசு மருத்துவமனை அவசர பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட விஷ்ணு, சிகிச்சை பலனின்றி இறந்தார். பொக்லைனின் உதவியுடன் கார் மற்றும் லாரியை போலீசார் அகற்றினர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.பாலக்காடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைத்தனர். கல்லடிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிகின்றனர்.