தொழிலதிபரிடம் ரூ.60 கோடி அபேஸ்: நடிகை ஷில்பா ஷெட்டி தம்பதி மீது வழக்கு
மும்பை: மஹாராஷ்டிரா தொழிலதிபரிடம், 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும், தன்னிடம் பெற்ற 60 கோடி ரூபாயை தராமல் மோசடி செய்ததாக மும்பை போலீசில் தொழிலதிபர் தீபக் கோத்தாரி, 60, புகாரளித்துள்ளார். 'லோட்டஸ் கேபிடல் பைனான்ஷியல் சர்வீசஸ்' நிறுவனத்தின் இயக்குநரான அவர், புகாரில் கூறியுள்ளதாவது: என் நிறுவனத்தில் பணிபுரிந்த ராஜேஷ் ஆர்யா என்பவர் வாயிலாக நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா அறிமுகம் கிடைத்தது. தங்கள், 'பெஸ்ட் டீல் 'டிவி' பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துக்கு 60 கோடி ரூபாய் கடன் தரும்படி இருவரும் கோரினர். நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். மொத்த பணமும் நேரடியாக வழங்கினால், வரி விதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி என்னை வற்புறுத்தினர். அவர்கள் கேட்டபடி, பங்கு சந்தை ஒப்பந்தத்தின் கீழ், 2015 ஏப்ரலில் 31.95 கோடி ரூபாயும், 2015 செப்டம்பரில் 28.53 கோடி ரூபாயும் வழங்கினேன். இந்த சூழலில், பெஸ்ட் டீல் 'டிவி' நிறுவன இயக்குநர் பதவியை ஷில்பா ராஜினாமா செய்ததாக எனக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காரணம் கேட்டபோது, முதலீடு குறித்து கேள்வி எழுப்பிய போதும், முறையாக பதில் தரப்படவில்லை. அடுத்ததாக, 2017ல் அந்த நிறுவனத்துக்கு எதிராக திவால் நடவடிக்கை துவங்கப்பட்டது குறித்து அறிந்தேன். எனவே, என் பணத்தை மீட்க பலமுறை முயன்றும் எந்த பதிலும் இல்லை. என்னிடம் வாங்கிய 60 கோடி ரூபாயை, வேறு நிறுவனங்களில் ஷில்பா - ராஜ் தம்பதி முதலீடு செய்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், என்னிடம் வாங்கிய பணத்துக்கு வட்டியோ அல்லது வேறு எந்த கமிஷனோ அவர்கள் தரவில்லை. என் பண த்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஷில்பா ஷெட்டி, அவர் கணவர் ராஜ் குந்த்ரா மீது, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.