உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  வன்முறையை துாண்டியதாக ஸ்ரீநகர் எம்.பி., மீது வழக்கு பதிவு

 வன்முறையை துாண்டியதாக ஸ்ரீநகர் எம்.பி., மீது வழக்கு பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் தவறான மற்றும் வன்முறையை துாண்டும் வகையிலான கருத்துகளை பகிர்ந்த தேசிய மாநாட்டு கட்சியின் ஸ்ரீநகர் எம்.பி., மற்றும் முன்னாள் மேயர் ஜூனைத் அஸிம் மாட்டூ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலையை கண்டித்து, ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்க அம்மாநிலத்தில் இன்டர்நெட் வேகம் குறைக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் தவறான மற்றும் புனையப்பட்ட தகவல்களை பரப்பியதாக தேசிய மாநாட்டு கட்சி எம்.பி., அகா சையத் ருஹுல்லா மெஹ்தி மற்றும் ஸ்ரீநகரின் முன்னாள் மேயர் ஜூனைத் அஸிம் மாட்டூ மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில், அவர்கள் வேண்டுமென்றே இந்த தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது தெரியவந்திருப்பதாக கூறியுள்ளனர். எனவே, இருவர் மீதும் ஸ்ரீநகர் சைபர் குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளை பகிரும் முன், அது உண்மையா, போலியா, என்பது குறித்து பொதுமக்கள் ஆராய வேண்டும் என்றும் சமூக நல்லிணக்கத்திற்கு பாதகமாக எந்த தகவலையும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !