உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுபரிசு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுபரிசு!

புதுடில்லி பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும், கோதுமை, உள்ளிட்ட ஆறு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், வேளாண் துறை, உட்கட்டமைப்பு மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆகிய விஷயங்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: வேளாண் விளைபொருட்களுக்கான செலவு மற்றும் விலை ஆணையம், ராபி சீசனில் ஆறு பயிர்களுக்கான விலையை பரிந்துரைத்திருந்தது. அதை ஏற்று 2025 -- 26 ராபி பயிர்கள் சந்தைப்படுத்துதல் காலத்தில் ஆறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி கோதுமைக்கான விலை குவின்டாலுக்கு 150 ரூபாய் உயர்த்தி, 2,425 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்லி பயிருக்கான விலை 130 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,980 ரூபாயாகவும், கொண்டைக்கடலைக்கான விலை 210 ரூபாய் உயர்த்தப்பட்டு 5,650 ரூபாயாகவும், மசூர் பருப்புக்கான விலை 275 ரூபாய் உயர்த்தப்பட்டு 6,700 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை இதுவரை இல்லாத அளவு குவின்டாலுக்கு 300 ரூபாய் உயர்த்தப்பட்டு 5,950 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராபி பருவ பயிர்கள் இந்த விலையின்படி கொள்முதல் செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளில் ராபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, ஒன்று முதல் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.உட்கட்டமைப்பு துறையில் முக்கிய முடிவாக, வாரணாசியில் கங்கை நதியின் குறுக்கே 2,642 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் மற்றும் சாலை வசதியுடன் கூடிய இரண்டடுக்கு பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதன் கீழ் அடுக்கில் நான்கு வழி ரயில் பாதையும், மேலடுக்கில் ஆறு வழி சாலையும் அமைய உள்ளன. இந்த பாலம் வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் தொழில் துறை தேவைகளை பூர்த்தி செய்யும்.மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மூன்றாவது முக்கிய முடிவாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். 12 மாத விலைவாசி உயர்வை கணக்கில் வைத்து, ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3 சதவீத உயர்வின் காரணமாக 45 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் வாயிலாக 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர். இதனால், அரசுக்கு 9,448 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R.RAMACHANDRAN
அக் 17, 2024 07:56

இந்த நாட்டில் பணியில் இருப்பவர்களை விட ஓய்வூதியம் பெறுபவர்கள் தான் அதிகம் உள்ளனர்.லஞ்சம் இன்றி எந்த பணியும் செய்யாதவர்களுக்கு ஓய்வூதியம் எதற்கு. இராணுவத்தில் பணி புரிபவர்கள் தவிர மற்றவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் என்பது இல்லாமல் செய்யலாம்.


Amar Akbar Antony
அக் 17, 2024 07:55

மத்யத்தில் கொடுத்துவிட்டார்கள் இனி தமிழ் மாநிலமும் அவர்கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் இந்தியா ஒருக்காலும் ஏழை பணக்காரர்களுக்கு இடையே மிதிபடும் மத்திய வர்கத்தினர்க்கு அதாவது தனியார் நிறுவனங்களில் வேலை செயும் மத்திய வர்கத்தினர்க்கு ஒரு உதவியுமோ சலுகையுமோ கோடுக்காது


Rajarajan
அக் 17, 2024 06:18

ஒரு சில சந்தேகங்கள். நாட்டில் பஞ்சமே இல்லாத நிலையில், அரசு ஊழியருக்கு மட்டும் பஞ்சம் எங்கிருந்து வருகிறது, அவர்களுக்கு மட்டும் பஞ்சபடி ஏன் ? வருடத்தில் ஒருமுறை மட்டுமே பட்ஜெட் போடும்போது, அரசு ஊழியருக்கு வருடத்தில் இரண்டுமுறை பஞ்சபடி வழங்க, நிதி எப்படி திரட்டப்படுகிறது ?? தனியார் ஊழியர் மட்டும் இந்த பஞ்சம் மற்றும் பஞ்சபடி இல்லாமல் வாழ்வது எப்படி ? ஆனால், அரசு ஊழியர் மற்றும் தனியார் இருவருக்கும் ஒரே வரி விதிப்பு தானே உள்ளது. நஷ்டதில் இயங்கும் அரசுத்துறை / பொதுத்துறை ஊழியருக்கு இந்த பஞ்சபடி உண்டு தானே ?? அப்படியெனில், தனியார் செலுத்தும் வரிப்பணம், அரசு ஊழியருக்கு மட்டும் ஆள்பவர்கள் அள்ளி அள்ளி தந்தால், திரும்ப திரும்ப அதை நிரப்ப, தனியார் ஊழியர் தான் உழைத்து நிரப்ப, அவர்கள் தான் அரசுக்கு இளிச்சவாயர்களா ?? அவர்களுக்கு குடும்பம், வாரிசு, வயிறு, எதிர்காலம் என்ற ஒன்று இருப்பது, அரசுக்கு மற்றும் ஆள்பவர்களுக்கு தெரியாதா ?? அரசு என்றல் மட்டும், பொதுமக்களின் கஜானாவை இப்படி ஆளாளுக்கு சுயநலத்திற்கு சூறையாடலாமா ? இந்த அகவிலைப்படி சலுகையை ஆள்பவரும் / அரசுஊழியரும், தங்கள் வீட்டு வேலைக்காரர்களுக்கு தங்களது சொந்த செலவில் இருந்து வழங்குவார்களா ?? ஏன் தங்கள் சொந்த பணம் என்றால் மட்டும் பஞ்சம் நாட்டில் இல்லையா ?? இந்த பூனைக்கு யார் எப்போது மணி கட்டுவரோ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை