உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது

ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது

புதுடில்லி: தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட, 2.5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக இந்திய மின் கட்டமைப்பு நிறுவனத்தின் மூத்த பொது மேலாளரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.இந்திய மின் கட்டமைப்பு நிறுவனத்தின் ராஜஸ்தான் மாநில ஆஜ்மிர் கிளை இயங்கி வருகிறது. இதன், மூத்த பொது மேலாளராக உதய் குமார் பணியாற்றி வந்தார். சமீபத்தில், இந்நிறுவனம் சார்பில் ஒப்பந்தப் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு 'டெண்டர்' விடப்பட்டன.இதில், மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்த கே.இ.சி., சர்வதேச நிறுவனம் பங்கேற்றது.இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட ஏதுவாக உதய்குமார், லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, அந்நிறுவனத்தின் நிர்வாகி சுமன்சிங் என்பவர், உதய் குமாரை தனியாக சந்தித்து 2.5 லட்சம் ரூபாய் லஞ்சமாக நேற்று முன்தினம் அளித்தார். அப்போது, இருவரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் சிக்கார், ஜெய்ப்பூர் மற்றும் பஞ்சாபின் மொஹாலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கைதான நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பல்வேறு ஆவணங்கள் சிக்கின. கே.இ.சி., இன்டர்நேஷனல் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜபராஜ் சிங், அந்நிறுவனத்தின் மூத்த நிதி மேலாளர் அதுல் அகர்வால் உட்பட ஐந்து பேர் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ