நங்லி டெய்ரியில் இயற்கை எரிவாயு ஆலை முதல்வர் ரேகா குப்தா திறந்து வைத்தார்
புதுடில்லி:“கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்வதற்கும், யமுனை நதியில் மாசுபாட்டைக் குறைக்கவும் இயற்கை எரிவாயு ஆலை உதவும்,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார். டில்லியின் முதல் பெரிய இயற்கை எரிவாயு ஆலையை நங்லி டெய்ரியில் முதல்வர் ரேகா குப்தா திறந்து வைத்து பேசியதாவது: இது ஒரு பெருமைமிக்க தருணம். மாட்டுச் சாணம் மற்றும் மாநகரில் தினமும் உருவாகும் மக்கும் கழிவுகளை பதப்படுத்த இதுபோன்ற இயற்கை எரிவாயு ஆலைகள் மேலும் பல அமைக்க வேண்டும். உரம் நங்லி டெய்ரியில் 2.72 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலையில், மாட்டுச் சாணம் மற்றும் மக்கும் கழிவுகளை பதப்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது. மேலும், துணைப் பொருளாக உரமும் கிடைக்கிறது. இதுபோன்ற இயற்கை எரிவாயு ஆலையால், கழிவுநீர் வடிகால்வாய்கள் துாய்மையாகப் பராமரிக்க முடியும். மேலும், யமுனை நதியிலும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியும். இயற்கை எரிவாயுவால் வருவாயும் கிடைக் கும். டில்லி மாநகரில் தினமும் 15 லட்சம் கிலோ பசு சாணம் உருவாகிறது. கல்வி மையம் எனவே, அதை முழுதும் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்க ஒரு ஆலை போதாது. எதிர்காலத்தில் மேலும் பல இயற்கை எரிவாயு ஆலைகள் அமைக்கப்படும். இந்த ஆலைக்கு 2018ம் ஆண்டிலேயே மத்திய அரசு நிதி வழங்கியது. ஆனால், ஆம் ஆத்மி அரசு இந்த திட்டத்தில் அக்கறை காட்டவில்லை. மாறாக, மத்திய அரசை குற்றம் சொல்வதிலேயே கவனம் செலுத்தி வந்தது. டில்லியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பிறகுதான், மத்திய அரசு மற்றும் டில்லி மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டத்தை விரைவுபடுத்தியது. இந்த இயற்கை எரிவாயு ஆலை பிரதமர் நரேந்திர மோடியின், பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் கனவுத் திட்டத்தின் ஒரு பகுதி. இவ்வாறு அவர் பேசினார். நங்லி டெய்ரி இயற்கை எரிவாயு ஆலையில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, இந்திரபிரஸ்தா எரிவாயு லிமிடெட் நிறுவனத்துக்கு விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. கல்வி மையம் அம்பேத்கர் பல்கலையின் கரம்புரா வளாகத்தில், சுவாமி விவேகானந்தா பவனை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்து பேசியதாவது: தலைநகர் டில்லியை, கல்வி மையமாக மாற்றுவதே பா.ஜ., அரசின் நோக்கம். கனரக தொழில்கள் மீதான கட்டுப்பாடுகளால் டில்லி மாநகரை தொழில்துறை மையமாக உருவாக்க முடியாது என்றாலும், கற்றலுக்கான முதன்மையான மாநகரமாக உருவாக்க முடியும். கல்வி கற்க சிறந்த இடத்தைத் தேடும் மாணவர்கள், முதலில் டில்லியைப் பற்றி சிந்திக்க வேண்டும். நம் குழந்தைகள் உயர் படிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். இவ்வாறு அவர் பேசினார். டில்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், புதுடில்லி தொகுதி லோக்சபா எம்.பி., பான்சுரி ஸ்வராஜ், எம்.எல்.ஏ., ஹரீஷ் குரானா, துணைவேந்தர் அனு சிங் லாதர் உட்பட பலர் பங்கேற்றனர்.