ஒலம்பிக்கில் பதக்கம் வென்றால் ரூ.6 கோடி முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
மங்களூரு: ''ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு, மாநில அரசு சார்பில் ஆறு கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின், சம்யுக்தா ஆசிரமத்தில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, கர்நாடக விளையாட்டுப் போட்டிகளை முதல்வர் சித்தராமையா, நேற்று துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறோம். இந்த தொகையை நல்ல முறையில் பயன்படுத்தி, திறமையாக விளையாடி பதக்கங்கள் பெற்று வர வேண்டும். விளையாட்டுத் துறையை மேம்படுத்துங்கள்.விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டுத் துறை எவ்வளவு நிதி அல்லது சலுகைகள் கேட்டாலும் வழங்குவதற்கு அரசு தயாராக உள்ளது. எனவே, மாநிலத்தின் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும்.ஒலிம்பிக் போட்டிகளில், பதக்கம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு, மாநில அரசு சார்பில் ஆறு கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பது குறித்து, அமைச்சரவையில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.வரும் பட்ஜெட்டில், தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் விளையாட்டு அரங்கங்களை தரம் உயர்த்த, மூன்று கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.