உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 2022ம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து பேர் மீது என்.ஐ.ஏ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த 2022ம் ஆண்டு அக்., 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி, உமர் பரூக், பெரோஸ்கான், முகமது தவுபிக், முகமது இத்ரீஸ், முகமது அசாருதீன், மற்றொரு முகமது அசாருதீன், தாஹா நசீர் உள்ளிட்ட 8பேரையும் அடுத்தடுத்து கைது செய்தனர். கார் குண்டு வெடிப்பு வழக்கில் மொத்தம், 14 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட, 14 பேர் மீது சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நான்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இந்நிலையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் இன்று மேலும் ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஷேக் ஹிதயாத்துல்லா, உமர் பரூக், பவாஸ் ரஹ்மான், ஷரண் மற்றும் அபு ஹனிபா ஆகியோர் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்ததாக என்ஐஏ குற்றம்சாட்டிஉள்ளது. கார் குண்டுவெடிப்பு தொடர்புடைய சம்பவங்களில் இவர்களுக்கு பங்கு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இத்துடன் சேர்த்து, கார் குண்டுவெடிப்பு வழக்கில் 17 பேர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அதில், ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் உமர் பரூக் ஆகியோர் மீது முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அவர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இவர்கள் போலி கோவிட் தடுப்பூசி சான்றிதழ் தயாரித்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தேவையான வெடிபொருட்கள் மற்றும் தேவையான கருவிகளை வாங்கி உள்ளனர். பவாஸ் ரஹ்மான், ஷரண் ஆகியோர் போலி சான்றிதழ் தயாரிக்க உதவி உள்ளனர். இதற்கு தேவையான பணத்தை அபு ஹனிபா அளித்து உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் என்ஐஏ தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை