3 அமைச்சர்களுக்கு காங்., மேலிடம் நோட்டீஸ்!: சர்ச்சைகளில் சிக்கியதால் நடவடிக்கை
பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குவதால், காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. வெவ்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள மூன்று அமைச்சர்களுக்கும், மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. அரசு அமைந்த சில மாதங்கள், சுமுகமாக சென்றன. முதல்வர் சித்தராமையா வாக்குறுதி திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்தினார். அமைச்சர்களும் அவரவர் துறைகளை சிறப்பாக நிர்வகித்தனர். இதனால் அரசுக்கும், கட்சிக்கும் நல்ல பெயர் கிடைத்தது.கர்நாடகாவில் செயல்படுத்திய திட்டங்களை போன்று, வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தினர். இதனால் காங்., மேலிடம் மகிழ்ச்சி அடைந்தது. கர்நாடகாவில் வகுக்கப்பட்ட தேர்தல் திட்டங்களை, பல்வேறு மாநிலங்களிலும் மேலிடம் செயல்படுத்தியது.ஆனால் மேலிடத்தின் நிம்மதி, அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக சர்ச்சையில் சிக்குகின்றனர். இதனால் கட்சி தர்மசங்கடத்துக்கு ஆளாகியுள்ளது. 'முடா' முறைகேடு
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு பின், அரசுக்கு நெருக்கடி ஆரம்பமானது. ஆணையத்தின் 187 கோடி ரூபாய் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. ஆணையத்தின் பணம், லோக்சபா தேர்தல் செலவுக்கு காங்., பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்தது.அதன்பின், 'முடா' முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினரே, இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். விசாரணையையும் எதிர்கொண்டுள்ளனர்.இதற்கிடையே பல ஆண்டுகளாக, விவசாயிகள் விவசாயம் செய்யும் நிலம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. நோட்டீஸ் அனுப்பி நிலத்தை மீட்டு, வக்பு வாரியத்தில் சேர்க்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் உத்தரவிட்டது, சர்ச்சைக்கு காரணமானது. எதிர்க்கட்சியினரும், விவசாயிகளும் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்தனர்; போராட்டமும் நடத்தினர்.விவசாயிகள் நிலம் மட்டுமின்றி, மடங்கள், கோவில்களின் சொத்துகள் மீதும், வக்பு வாரியம் கண் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சூழ்நிலை மோசமாவதை உணர்ந்த முதல்வர் சித்தராமையா, நோட்டீசை திரும்ப பெறும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால், சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை.பெலகாவியின், சவதத்தி தாலுகா தாசில்தார் பசவராஜ் நாகராளாவின் அலுவலகத்திலேயே, சில நாட்களுக்கு முன் பி குரூப் ஊழியர் ருத்ரண்ணா, 35, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு முன், எழுதி வைத்துள்ள கடிதத்தில், 'என் இறப்புக்கு தாசில்தார் பசவராஜ் நாகராளா, சோமுவே காரணம்' என குறிப்பிட்டிருந்தார். சோமு, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், கலால் துறையில் லஞ்சம் தாண்டவமாடுவதாக, மதுபான விற்பனையாளர்கள் சங்க துணைத் தலைவர் கருணாகர ஹெக்டே குற்றம்சாட்டினார். கவர்னரிடம் புகார்
ஊடகத்தினர் சந்திப்பு நடத்திய இவர், 'கலால் துறை அமைச்சர் திம்மாபூர் கோடி, கோடியாக லஞ்சம் கேட்கிறார். கலால் துறை அதிகாரிகள் எங்களிடம், நாங்களும் பெருமளவில் லஞ்சம் கொடுத்து, இடமாற்றம் செய்யப்பட்டு கலால் துறைக்கு வந்துள்ளோம் என கூறி மதுபான விற்பனையாளர்களிடம் பணம் பிடுங்குகின்றனர்.'கலால் துறைக்கு திம்மாபூர் தேவையில்லை. இவரை மாற்ற வேண்டும். இவர் மீது ஏற்கனவே, சமூக ஆர்வலர் ஒருவர், கவர்னரிடம் புகார் அளித்துள்ளார். நவம்பர் 25ம் தேதி நாங்கள், மதுபான விற்பனையை நிறுத்தி, போராட்டம் நடத்துவோம்' என எச்சரித்திருந்தார்.இதுபோன்று, அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக சர்ச்சையில் சிக்குவது, எதிர்க்கட்சிகளுக்கு பலமான அஸ்திரங்களாக அமைந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி உட்பட, பா.ஜ., தலைவர்கள் இந்த விஷயங்களை கூறி, காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர். மஹாராஷ்டிரா உட்பட, சில மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ., தலைவர்கள், கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்களின் ஊழல்களை பற்றி பேசுகின்றனர்.இதனால் எரிச்சல் அடைந்துள்ள காங்., மேலிடம், அமைச்சர்கள் ஜமீர் அகமது கான், லட்சுமி ஹெப்பால்கர், திம்மாபூருக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில், மூன்று அமைச்சர்களும் சிக்கிஉள்ளனர்.