உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபைக்கு போட்டி; திருமா திட்டம் என்ன?

சட்டசபைக்கு போட்டி; திருமா திட்டம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

தமிழக அரசியல்வாதிகளில் மெத்தப் படித்தவராக அறியப்பட்ட ஒருவர் திருமாவளவன். எந்த ஒரு முடிவையும், தீர யோசனை செய்த பிறகு தான் எடுப்பார்; எடுத்த முடிவிலும் உறுதியாக இருப்பார். இப்போது அவர் எடுத்திருக்கும் முடிவு, சராசரிக்கும் கீழான அரசியல்வாதிகளைப் போலவே இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.பொதுவாக, சராசரி அரசியல்வாதிகள், உள்ளூர் தேர்தல் முதல் உலகத் தேர்தல் வரை, எந்த ஒரு தேர்தல் வந்தாலும், அதில் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தே தீர வேண்டும் என்று ஆசைப்படுவர்; அது போன்றதாக இருக்கிறது திருமா இப்போது எடுத்துள்ள முடிவு. இப்போது அவர் சிதம்பரம் லோக்சபா தொகுதியின் எம்.பி., ஆக இருக்கிறார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன.அப்படியிருக்கையில், இப்போது நடக்கும் சட்டசபை தேர்தலிலும் போட்டியிடுகிறார் திருமா. அவர் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லும் பட்சத்தில், சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டி இருக்கும். ஏன் இத்தகைய ஒரு தேவையற்ற பிரச்னையை உருவாக்குகிறார் திருமா? அவரது நோக்கம் என்னவாக இருக்க முடியும்?ஒருவேளை தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தன்னிடம் இருக்கும் எம்எல்ஏக்கள் காரணமாக தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும்; அத்தகைய சூழ்நிலையில் தான் சட்டசபையில் எம்எல்ஏவாக இருப்பது முக்கியம் என்று திருமா கருதுகிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறும் லட்சியத்தை நோக்கிய பயணமாகவே அவரது இந்த முடிவு இருக்கிறது என்கின்றனர் கட்சியினர். தான் கேட்ட எண்ணிக்கையில் சட்டசபை தொகுதிகளை கொடுக்காமல், இழுத்தடித்து, மனதை நோகடித்த திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்கத்துடன் திருமா இந்தத் திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார் என்கின்றனர் அவரது கட்சியினர். திருமா திட்டம் நிறைவேறுமா, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்குமா என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் அன்று உறுதியாக தெரிந்து விடும்.

பழைய வரலாறு

கடந்த 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் மங்களூர் தொகுதியில் வெற்றி பெற்றார் திருமா. ஆனால் பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே ராஜினாமா செய்து விட்டார். தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றது பற்றி, திமுக தரப்பில் கிண்டலாக ஏதோ கூறியதால் பதவியை ராஜினாமா செய்தார். எனவே அவருக்கு ராஜினாமா செய்வது புதிதல்ல என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அரசுக்கு வெட்டிச்செலவு

அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக இருக்கும் சிவி சண்முகம் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற்றால் காலியாகும் அந்த இடத்தை, சட்டசபையில் பெரும்பான்மை எம்எல்ஏக்களை கொண்டுள்ள கட்சி பூர்த்தி செய்து விடும். எனவே அரசுக்கு வெட்டிச் செலவு என்பது இல்லை. ஆனால் லோக்சபா இடைத்தேர்தல் என்பது அப்படி அல்ல. அரசுக்கு பல கோடி ரூபாய் வெட்டிச் செலவை ஏற்படுத்தக் கூடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ