ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரச்னை கண்டறிய மாநகராட்சி திட்டம்
பெங்களூரு: பெங்களூரில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை விரைந்து கண்டுபிடித்து தீர்வு காண, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த, மாநகராட்சி திட்டமிடுகிறது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:அடிப்படை வசதிகள் தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சியின் சஹாய வாணி எண் உட்பட பல வழிகளில் தினமும் நுாற்றுக்கணக்கான புகார்கள் வருகின்றன.பொதுமக்கள் புகார் அளிக்காவிட்டால், பிரச்னைகள் மாநகராட்சியின் கவனத்துக்கு வருவது இல்லை. எனவே ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தி, பிரச்னைகளை கண்டறிந்து தீர்வு காண, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.நகர போலீஸ் துறை சார்பில், பெங்களூரின் வீதிகள், சந்திப்பு உட்பட பல்வேறு இடங்களில் 'நிர்பயா' திட்டத்தின் கீழ் 6,000க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, குற்றங்களை கண்காணிக்க மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.தற்போது இந்த கேமராக்களை பயன்படுத்தி பொதுமக்களின் பிரச்னைகளை கண்டறிந்து தீர்வு காண மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இந்த கேமராக்களுடன், தன் அதிகாரிகள் பயன்படுத்தும் கார்கள் உட்பட மற்ற வாகனங்களுக்கும் 250 கேமராக்களை பொருத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கேமராக்களில் பதிவாகும் பிரச்னைகளை பார்த்து, மாநகராட்சியிடம் தெரிவிக்க, தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்படும். இதற்காக மூன்று கோடி ரூபாய் செலவிடப்படும்.ஒப்பந்தம் பெறும் நிறுவனம், மூன்று ஆண்டுகள் வரை ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரச்னைகளை கண்டுபிடித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் பணியை செய்வர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.