வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி ஹோட்டலில் தற்கொலை
முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தின் பெகராஸ்பூர் கிராமத்தை சேர்ந்த அர்ஷத், 21, என்ற இளைஞர், கடந்த, 18 ம் தேதி, 17 வயது சிறுமியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பள்ளிக்கு சென்ற மாணவியை, ஆசை வார்த்தை கூறி, ஆலை ஒன்றின் தொழிலாளியான அர்ஷத் கடத்தி சென்று விட்டார் என சிறுமியின் பெற்றோர், அர்ஷத் மீது போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து, அந்த இருவரையும் போலீசார் தேடினர். அப்போது, பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் சண்டிகர் அருகே உள்ள ஒரு ஹோட்டல் அறையில், இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாக, அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை என கூறியிருந்தனர். எனினும், இருவரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவர்களின் மரணம் குறித்து விசாரிக்கின்றனர்.