உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியுரிமை சட்டப்பிரிவு செல்லும் அசாம் வழக்கில் கோர்ட் தீர்ப்பு

குடியுரிமை சட்டப்பிரிவு செல்லும் அசாம் வழக்கில் கோர்ட் தீர்ப்பு

புதுடில்லி, கடந்த 1966 ஜன., 1 முதல் 1971 மார்ச் 25 வரையில், அசாமுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு அம்மாநில குடியுரிமையை உறுதி செய்யும் குடியுரிமை சட்டப்பிரிவு - 6ஏ செல்லுபடியாகும்' என, உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து அசாமுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான அசாம் ஒப்பந்தம், 1985ல் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் ராஜிவ் மற்றும் அனைத்து அசாம் மாணவர் சங்கம் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

சட்டத்தில் திருத்தம்

இதன்படி, 1966 ஜன., 1 முதல் 1971 மார்ச் 25 வரையிலான காலகட்டத்தில், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து அசாமுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், சட்டப்பிரிவு - 6ஏ சேர்த்து குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.இதன்படி, குறிப்பிட்ட காலகட்டத்தில் அசாமில் குடியேறியவர்கள் குடியுரிமைச் சட்டப்பிரிவு - 18-ன் கீழ் தங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். இதன் விளைவாக, இந்த நடைமுறை அசாமில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர், குறிப்பாக வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள், 1971 மார்ச் 25-ம் தேதிக்கு முன்வந்திருந்தால் மட்டுமே இந்திய குடியுரிமை பெற முடியும் என, இறுதி செய்யப்பட்டது.இந்த சட்டப்பிரிவு - 6ஏ அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள் மீது, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. இதில், 4:1 என்ற பெரும்பான்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் விபரம்:சட்டவிரோத குடியேற்ற பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கத்திலேயே அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அசாம் ஒப்பந்தத்தின் கீழ் உள்ளவர்களின் குடியுரிமையை கையாள்வதற்கான ஒரு சிறப்பு ஏற்பாடாக குடியுரிமை சட்டத்தில் பிரிவு - 6ஏ சேர்க்கப்பட்டது.சிறிய நிலப்பரப்பு மற்றும் வெளிநாட்டினரைக் கண்டறிவதை ஒரு விரிவான செயல்முறையாக கருத்தில் வைத்து பார்க்கும்போதும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போதும் அசாமில் புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகமாகவே உள்ளது. எனவே, சட்டப்பிரிவு - '6ஏ' யின் செல்லுபடி தன்மையை நீதிமன்றம் உறுதி செய்கிறது.இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

பார்லி.,க்கு உள்ளது

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், மனோஜ் மிஸ்ரா சார்பிலும் சேர்த்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி சூரிய காந்த், தலைமை நீதிபதியின் தீர்ப்புக்கு இணங்குவதாக தெரிவித்தார். மேலும், அத்தகைய விதியை இயற்றுவதற்கான தகுதி பார்லிமென்டுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.நீதிபதி பர்திவாலா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அவர் தன் தீர்ப்பில், சட்டப்பிரிவு - 6ஏ அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறினார். இந்த சட்ட திருத்தம், அந்த குறிப்பிட்ட காலத்துக்கு ஏற்றதாக இருக்கலாம்; ஆனால், தற்போது அதில் மாற்றம் தேவை என, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை