உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்.,27) 'மோந்தா' புயலாக உருமாறி வலுவடைந்தது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. காக்கிநாடா நேற்று காலை 8:30 வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு 13; ஊத்து 12; காக்காச்சியில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை 9; திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது . தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை நிலவரப்படி வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது.

மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா

இது, அந்தமான் தீவுகளின் போர்ட் பிளேயரில் இருந்து, மேற்கு, தென்மேற்கில் 620 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கில் 640 கி.மீ., தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து, தென்கிழக்கே 830 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மோந்தா புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.புயலானது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக நாளை மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் மணிக்கு 90 - 100 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ., வேகத்திலும் காற்று வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவுகிறது. இது இன்று தெற்கு, தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும். ஆரஞ்ச் 'அலெர்ட்' தமிழகத்தில் வட மாவட்டங்களில் சில இடங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இரண்டு நாட்களிலும் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசலாம். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது; இதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யலாம். நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் கன அல்லது மிக கனமழை பெய்யக்கூடும். தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த சூறாவளிக்காற்று வீசலாம். எனவே, மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் . இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆந்திராவில் உஷார் நிலை வங்கக்கடலில் 'மோந்தா' புயல் காரணமாக, ஆந்திராவின் காக்கிநாடா, கோனாசீமா, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, பாபட்லா, பிரகாசம், ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு, நெல்லுார் மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சித்துார், திருப்பதி உட்பட 16 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யலாம் என்பதால், 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கர்னுால், அனந்த புரம், ஸ்ரீசத்யசாய் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, மாநிலம் முழுதும் அனைத்து அரசு துறைகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. மீட்புப் பணிக்கு துணை ராணுவமும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் தயார் நிலையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை