உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 20 ஆண்டுகள் பழைய விமானங்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடிவு..

20 ஆண்டுகள் பழைய விமானங்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடிவு..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சர்வதேச அளவில் விமானங்களை வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், 20 ஆண்டுகள் வரை பழமையான விமானங்களை இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க, டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.இந்திய விமான நிறுவனங்கள் சமீபகாலமாக தங்களது வணிகத்தை விரிவுபடுத்தி வருகின்றன. மேலும், 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன. உலகளாவிய வினியோகத் தொடர் சிக்கல்களால், விமானங்கள் கிடைப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது.இதை சமாளிக்க, சில விமான நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு விமானங்களை குத்தகைக்கு எடுக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, 18 ஆண்டுகள் வரை பழமையான அழுத்தம் உடைய விமானங்களை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.இதை, 20 ஆண்டுகளாக அதிகரிக்க டி.ஜி.சி.ஏ., திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, டி.ஜி.சி.ஏ., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனி விமானம், பொது போக்குவரத்து மற்றும் பிற செயல்பாடுகளுக்கான விமானங்களை இறக்குமதி செய்ய, வரைவு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. முன்னர், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 18 ஆண்டுகள் வரை பழமையான அழுத்தம் உடைய விமானங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.இதை, 20 ஆண்டுகளாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதே போல, 20 ஆண்டுகளுக்கு பதில், 25 ஆண்டுகள் வரை அழுத்தமற்ற விமானங்களை இறக்குமதி செய்யலாம்.பயணியர் சேவை மற்றும் பொது விமானப் போக்குவரத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் அழுத்தம் உடைய விமானங்கள், 20 ஆண்டுகள் பழமையானதாகவோ அல்லது வடிவமைக்கப்பட்டதில் இருந்து 65 சதவீத கால பயன்பாட்டை நிறைவு செய்திருக்கவோ கூடாது.அழுத்தமற்ற விமானங்களை பொறுத்தவரை, கடந்த ஆறு மாதங்களில் 50 மணி நேரம் பறந்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை