காங்., - எம்.எல்.ஏ., குறித்து அவதுாறு: 6 பேருக்கு வலை
குருகிராம்:ஹரியானா மாநிலத்தில், காங்கிரஸ் எம்.ஏல்.ஏ., குறித்து, சமூக வலைதளத்தில் அவதுாறான கருத்துக்களை பதிவிட்டதாக, நுாஹ் நகரைச் சேர்ந்த, ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹரியானா மாநிலம், பெரோஸ்பூர் ஜிர்கா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மம்மன் கான். இவரது சகோதரர் முஸ்த்கீம் கான், 'தன் சகோதரரும் எம்.எல்.ஏ.,வுமான மம்மன் கான் பற்றி சமூக வலைதளத்தில் அவதுாறான கருத்துக்களை சிலர் பதிவு செய்துள்ளனர். 'அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய நாகினா போலீசார், நூஹ் நகரைச் சேர்ந்த ஜாஹிர், ஜக்காரியா மற்றும் அப்பார் உட்பட, ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். நாகினா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவின் குமர், “இந்த விவகாரம் குறித்து விசாரணை நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறு பேரும் விரைவில் கைது செய்யப்படுவர்,” என்றார்.