பட்டாசு புகையால் மூச்சுத்திணறிய டில்லி; அபாய அளவில் காற்றின் தரக்குறியீடு
புதுடில்லி: தீபாவளியை முன்னிட்டு, தலைநகர் டில்லியில் நேற்று முன்தினம் இரவு பட்டாசுகள் வெடித்ததால், மாசு அதிகரித்து காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியது. பெரும்பாலான மாசு கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் மிக அபாயஅளவை எட்டியது. தீபாவளி பண்டிகைக்கு முன், பட்டாசுகள் வெடிப்பதற்கான தடையை உச்ச நீதிமன்றம் தளர்த்தி இருந்தது. மேலும், பசுமை பட்டாசுகள் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்திருந்தது. மோசமான நிலை இதைத் தொடர்ந்து டில்லியில் உள்ள மக்கள், தீபாவளி நாளில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகளால், ஏற்கனவே டில்லியில் காற்று மாசு அதிகரித்து இருந்த நிலையில், பட்டாசு புகையும் சேர்ந்து நிலைமையை மோசமாக்கியது. இதன் காரணமாக காற்றின் தரக்குறியீடு, 359 என்ற மிக மோசமான நிலையை எட்டியது. இதனால், பெரும்பாலான மக்கள் சுவாச பிரச்னை, கண் எரிச்சல், தொண்டை வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, காஜியாபாதில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்பாகவே, தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் காற்றின் தரம் மாசு அடைந்திருந்த நிலையில், பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்றில் நச்சுப்புகை கலந்தது. எதிர்பார்ப்பு காற்றின் தரக்குறியீடு, 0 - 50 வரை இருந்தால் நன்று என கூறப்படுகிறது. இந்த அளவு, 51 முதல் 100க்குள் இருந்தால் திருப்தி என வரையறுக்கப்படுகிறது. 101 முதல் 200 ஆக பதிவானால் மிதமான மாசு என்றும், 201 முதல் 300க்குள் இருந்தால் காற்றின் தரம் மோசமாக இருக்கிறது என்றும் அர்த்தம். இதுவே 301 முதல் 500க்குள் பதிவானால் மிக மோசம் என்றும், 401 முதல் 500 எனில் அபாயகரமானது எனவும் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், தீபாவளிக்குப் பின் டில்லியின் துவாரகா - - 417, அசோக் விஹார் - 404, வஸிர்பூர் - - 423 மற்றும் ஆனந்த் விஹார் - 404 ஆகிய நான்கு இடங்களில் காற்றின் தரக்குறியீடு அபாயகரம் என்ற அளவில் பதிவாகியுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து பட்டாசுகள் வெடிப்பது குறைந்திருப்பதால், காற்றின் தரம் அடுத்த ஓரிரு நாட்களில் சீராகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
அரசியல் சரவெடி!
டில்லியில் முன்பு ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, காற்று மாசு பிரச்னைக்கு வாகனங்கள் வெளியிடும் புகையே காரணம் என்று கூறியது. ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ., கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. இந்நிலையில், டில்லியில் தற்போது பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, எதிர்க் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி விமர்சனங்களை முன்வைத்துள்ளது. ''மாசு கட்டுப்பாட்டு விவகாரத்தில் மாநில அரசு தோல்வியை தழுவிவிட்டது,'' என, டில்லி ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார். “மக்களின் உடல் ஆரோக்கியம் கெட வேண்டும் எ ன அரசு நினைக்கிறதா, தனியார் மருத்துவமனைகளுடன் அரசு கூட்டணி வைத்திருக்கிறதா?” என, அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. அது தான் டில்லியில் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணம். பட்டாசுகள் வெடித்ததாலோ, விளக்குகளை ஏற்றியதாலோ மாசு ஏற்படவில்லை,” என, பா.ஜ., மூத்த தலைவர் அமித் மாள்வியா பதிலடி தந்துள்ளார்.
பாக்.,கில் தாக்கம்
நாடு முழுதும் தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக லாகூர் நகரின் காற்றின் தரம், அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து வந்த பட்டாசு புகைகளால் தான் தங்கள் நாட்டின் காற்றின் தரம் சீர்கெட்டு விட்டதா க பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.