உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல், வாத்ராவை விமர்சித்த திக்விஜய் சிங் சகோதரர் நீக்கம்

ராகுல், வாத்ராவை விமர்சித்த திக்விஜய் சிங் சகோதரர் நீக்கம்

போபால்:லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கின் சகோதரரும், முன்னாள் எம்.பி.,யுமான லஷ்மண சிங், கட்சியின் முதன்மை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும், ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

கடும் விமர்சனம்

இம்மாநில காங்., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கின் சகோதரர் லஷ்மண சிங். இவர், 1990ல் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், 1994ல் எம்.பி.,யானார். அம்மாநிலத்தில் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாகவும், ஐந்து முறை எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.நீண்ட அரசியல் பின்புலம் உடைய லஷ்மண சிங், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, கடந்த மாதம் கருத்து தெரிவித்தார். அதில், 'ராகுலும், அவரது மைத்துனர் ராபர்ட் வாத்ராவும் முதிர்ச்சியற்றவர்கள். இதை கட்சி இன்னும் எத்தனை காலத்திற்கு சமாளிக்க வேண்டியிருக்கும். அவர்களின் அறியாமையின் விளைவுகளை நாடு அனுபவித்து வருகிறது' என, கடுமையாக விமர்சித்து இருந்தார்.

நடவடிக்கை

இது கட்சிக்குள் புகைச்சலை கிளப்பியது. கட்சி தலைமை குறித்து பொதுவெளியில் விமர்சித்ததற்கு கண்டனம் எழுந்தது. இதற்கு காங்., தலைமை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. லஷ்மண சிங்கை, கட்சியின் முதன்மை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாக காங்., ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் செயலர் தாரிக் அன்வர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ