பயங்கரவாதி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எழுத தெரியுமா? தேஜஸ்விக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி
                            வாசிக்க நேரம் இல்லையா?
                             செய்தியைக் கேளுங்கள் 
                              
                             
                            
பாட்னா: ''என்னை பயங்கரவாதி எனக் குறிப்பிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவிற்கு, அந்த வார்த்தையை ஆங்கிலத்தில் எழுத தெரியுமா?'' என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 6, 11 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், பீஹாரின் கிஷன்கஞ்சில் நேற்று முன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவிடம், 'நீங்கள் அசாதுதீன் ஓவைசியின் கட்சியுடன் ஏன் கூட்டணி அமைக்கவில்லை' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''அசாதுதீன் ஓவைசி ஒரு பயங்கரவாதி; ஒரு வெறியர்,'' என தேஜஸ்வி விமர்சித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. வெறுப்புணர்வு இதற்கிடையே தேஜஸ்வியின் கருத்து பற்றி அசாதுதீன் ஓவைசியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: நான், தேஜஸ்விக்கு தலைவணங்காதவன்; அவரது தந்தைக்கும் அஞ்சாதவன்; அவர்களிடம் பிச்சை எடுக்காதவன். அதனால் என்னை கோழை என்கின்றனரா? என் முகத்தில் தாடி, என் தலையில் தொப்பி இருப்பதால் என்னை பயங்கரவாதி என்கிறாரோ? நான், பெருமையுடன் என் மதத்தை பின்பற்றுவதால் அவர் என்னை பயங்கரவாதி என்கிறார். அந்த வார்த்தையை, ஆங்கிலத்தில் அவருக்கு எழுத தெரியுமா? நம் அண்டை நாடான பாகிஸ்தான் பயன்படுத்தும் வார்த்தையை பேசுவதன் மூலம் இவரது வெறுப்புணர்வு வெளிப்பட்டுள்ளது. இது, பீஹாரின் பூர்வக்குடிகளான சீமாஞ்சல் மக்களை அவமதிக்கும் செயல். இவ்வாறு அவர் கூறினார். விருப்பம் முன்னதாக, பீஹார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 'மஹாகட்பந்தன்' கூட்டணியில் இணைய ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி விருப்பம் தெரிவித்து இருந்தது. மேலும், ஆறு தொகுதிகளை கேட்டது. எனினும், இந்தக் கோரிக்கையை அக்கூட்டணி நிராகரித்ததையடுத்து, அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி பீஹார் சட்டசபை தேர்தலில், 100 இடங்களில் தனித்து போட்டியிடுகிறது.