கு.க., ஆப்பரேஷனில் குளறுபடி டாக்டருக்கு ரூ.55,000 அபராதம்
சித்ரதுர்கா: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண், மீண்டும் குழந்தை பெற்றதால், டாக்டருக்கு, நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.சித்ரதுர்கா நகரில் வசிப்பவர் லட்சுமம்மா, 38. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இனி குழந்தைகள் வேண்டாம் என முடிவு செய்து, சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனையில், 2014 ஏப்ரல் 28ல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் லட்சுமம்மா மூன்றாவது முறையாக கருவுற்று, 2020 ஜனவரி 26ல் பெண் குழந்தை பெற்றார்.டாக்டர் சிவகுமார், சரியாக குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யவில்லை என, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், லட்சுமம்மா குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.இதுதொடர்பாக, நீதிமன்றம் விசாரணை செய்தபோது, டாக்டர் சிவகுமார், குடும்ப கட்டுப்பாடு செய்வதில் குளறுபடி செய்திருப்பது உறுதியானது.எனவே பாதிக்கப்பட்ட லட்சுமம்மா அனுபவித்த மன வலிக்கு, 30,000 ரூபாய், வழக்கு செலவாக 25,000 ரூபாய் என, மொத்தம் 55,000 ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, டாக்டர் சிவகுமாருக்கு நீதிமன்றம், நேற்று முன் தினம் உத்தரவிட்டது.