மலையேறும் போது சோடா குடிக்க கூடாது பக்தர்களுக்கு டாக்டர்கள் யோசனை
சபரிமலை:'மலையேறும் போது வயிறு நிறைய சாப்பிடக்கூடாது; தண்ணீர் தாகத்துக்கு சோடா குடிப்பதை தவிர்க்க வேண்டும்' என, சபரிமலையில் மலையேறும் பக்தர்களுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.சன்னிதானம் மருத்துவ கட்டுப்பாடு அதிகாரி டாக்டர் கே.கே.ஷியாம் குமார் கூறியதாவது:சபரிமலை வரும் பக்தர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். விரதமிருக்கும் போது ஊரில் நடைபயிற்சி உள்ளிட்ட வழக்கமான பயிற்சிகளை செய்ய வேண்டும். மலை ஏறும் போது, மெதுவாக செல்ல வேண்டும்.உடல் தளர்ச்சி இருப்பதாக கருதினால், ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்து மலை ஏற வேண்டும். தேவைப்பட்டால், பாதையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் பார்லர்களை பயன்படுத்த வேண்டும்.பம்பையில் இருந்து மலையேறுவதற்கு முன் வயிறு நிறைய சாப்பிடாமல், மிதமான உணவு எடுக்க வேண்டும். தண்ணீர் தாகம் எடுத்தால் சோடா போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து, சுடுநீர் குடிக்க வேண்டும். மலை ஏற தொடங்கும் முன், உடல் ரீதியாக ஏதாவது பிரச்னை இருப்பதாக உணர்ந்தால், பம்பை அரசு மருத்துவமனையில் டாக்டர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை சரியான நேரத்தில் உட்கொள்வதுடன் அந்த மருந்துகளுக்கான சீட்டுகளையும் தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமான வியர்வை ஏற்படும் போது அதற்கேற்றார் போல் தண்ணீரும் குடிக்க வேண்டும்.பாம்பு கடிக்கும் நிலை ஏற்பட்டால் உடலை குலுக்காமல் ஓரிடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். பாம்பு கடித்த இடத்தை கத்தி அல்லது பிளேடால் கீறி பெரிதாக்க கூடாது. கடியேற்ற பகுதியை முறுக்கி கட்டவும் கூடாது. இது ஆபத்தாகும். கடியேற்ற பகுதியை உயரமான இடத்தில் வைப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும்.உடனடியாக மருத்துவ கட்டுப்பாட்டு அறை 04735-202032 என்ற எண்ணுக்கு அழைத்து, இருக்கும் இடம், சூழ்நிலை போன்ற விபரங்களை தெரிவிக்கவும். பக்கத்தில் உள்ள மருத்துவ மையத்திலிருந்து ஊழியர்கள் வந்து ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உதவி செய்வர். விபரம் உடனடியாக சன்னிதானம் மற்றும் பம்பை மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டு அங்கே டாக்டர்கள் தயாராக இருப்பர்.சபரிமலை மருத்துவ சேவை ஹாட்லைன் உள்ளிட்ட நவீன தொலைத்தொடர்பு வசதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பம்பையில் முன்னெச்சரிக்கை
வங்கக்கடலில் ஏற்பட்ட புயலின் தாக்கம் கேரளாவிலும் இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்திருந்தது. இதையடுத்து, பம்பையில் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் தலைமையில் நீர் வளம், மின்துறை, போலீஸ், தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் நிவாரண படையினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பம்பை திருவேணி, ஆராட்டுக்கடவு ஆகிய இடங்களில் உள்ள தடுப்பணைகளில் நீர்மட்டம், ஒரு அடி உயரம் குறைக்கப்பட்டது.பம்பை நதியை பொறுத்தவரை முக்கியமாக திருவேணி பம்பிங் ஹவுஸ், சமீபத்தில் தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. இந்த தடுப்பணை நிரம்பி வழிந்து ஓடும் தண்ணீர் தான் ஆராட்டுக்கடவில் வந்து பக்தர்களுக்கு குளிக்க உதவுகிறது. தமிழகத்தில் நேற்று பலத்த மழை பெய்தும் சபரிமலையில் அதன் தாக்கம் இல்லை. லேசான வெயில் அடித்ததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.